Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சுவாமிநாதன் வருகிறார்!:வட இலங்கையில் இந்தியாவின் விவசாய “இராஜதந்திரம்’!!!

 இந்திய பசுமைப் புரட்சியின் தந்தையும்(!) பிரபல விவசாயத்துறை விஞ்ஞானியுமான எம்.எஸ்.சுவாமிநாதனின் வழிகாட்டலின் கீழ் இலங்கையின் வட பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நடவடிக்கைகளுக்கு புத்துயிரளிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

இரு தசாப்தங்களுக்கு மேலாக யுத்தம் இடம்பெற்றதும்,தமிழர் செறிந்து வாழ்வதுமான இப்பிராந்தியத்தை மீளக்கட்டியெழுப்பும் புதுடில்லியின் இணக்கப்பாட்டின் ஒரு பகுதியாக இவ்விவசாய வல்லுனர் ஈடுபடுத்தப்படவுள்ளார்.

இதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சு, தற்போதைய ராஜ்ய சபா உறுப்பினரான சுவாமிநாதனின் உதவியை நாடியுள்ளது.

இதனடிப்படையில், அடுத்தமாதமளவில் இலங்கை வருவாரென எதிர்பார்க்கப்படும் சுவாமிநாதன் நடவடிக்கைகளுக்குத் திட்டமிட இதுவே நேரமெனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

வெளிவிவகார அமைச்சு, இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை மீளக்கட்டியமைக்கும் வகையிலான சிறந்த நிகழ்ச்சித் திட்டத்தைத் தீட்டியுள்ளது. அங்குள்ள பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் மீன்பிடித்தல் என்பவற்றையே வாழ்வாதாரத் தொழில்களாகக் கொண்டுள்ளனர்.

இப்பிரச்சினைகள் பற்றி விளக்கமாக படித்துள்ளேன். அதற்கான தீர்வுகளையும் உருவாக்கியுள்ளேன். இப்பொழுது அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான தருணம். இந் நடவடிக்கைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் ஆரம்பமாகும் என்றார்.

இவ்வுதவிகள் புதியவனவல்ல வியட்நாம் மற்றும் கம்போடியா ஆகியவற்றில் யுத்தம் இடம்பெற்ற காலமான 70 ஆம் ஆண்டுகளின் போதும் அந்நாடுகளின் விவசாய நடவடிக்கைகளுக்கு இந்தியா உதவியுள்ளது.

இலங்கைக்கும் விதைகள், உரம், பூச்சிநாசினி மற்றும் அறுவடைக்கான இயந்திரங்களை வழங்குவதுடன் மீன்பிடித் தொழிலுக்கான உதவியையும் இந்தியா வழங்கவுள்ளது.

இலங்கையுடன் இணைந்து பணிபுரிவதன் மூலம் அங்கு இடம்பெயர்ந்து வாழும் மக்கள் அகதி முகாம்களிலிருந்து தமது கிராமங்களுக்குத் திரும்பும் போது தமது வாழ்வாதாரத் தொழில்களைப் பெற்று சிறந்த வகையில் வாழ்வை ஆரம்பிப்பர். இதற்கான வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை விவசாய அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நடவடிக்கைகளுக்கு இந்தியா தனது அனுபவத்தையும் வளங்களையும் வழங்கவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்பிரதேசங்களில் 3 இலட்சம் ஹெக்டேயர் நிலம் பயிர்ச் செய்கைக் கேற்றதாக உள்ளதாகவும், இதில் நெற் செய்கைக்காக 1 இலட்சம் ஹெக்டேயர் வரை உபயோகப்படுத்த முடியுமெனவும் தெரிவிக்கப்படுகிறது. இங்கு மிளகாய், நிலக்கடலை, மரக்கறி, பழவகைகள் என்பனவும் உற்பத்தி செய்ய முடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

Exit mobile version