சுய நிர்ணய உரிமைக் கோரிக்கைக்காக தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டம் 60 ஆண்டுகால வரலாறு உள்ளது. சமானியத் ஈழத் தமிழர் ஒருவருக்குக்கூட சுய நிர்ணய உரிமை என்பதன் பருமட்டான அர்த்தம் தெரியும். இந்த நிலையில் தமிழ் ‘தேசிய’ கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் சுய நிர்ணய உரிமை குறித்துக் கருத்தளவில் கூடப் பேச மறுக்கிறார். லண்டனிலிருந்து வெளியாகும் ஊடகமொன்றிற்கு நேர்காணல் வழங்கிய விக்னேஸ்வரன் சுய நிர்ணய உரிமை குறித்துக் கேள்வியெழுபிய போது, அது அரசியல் வாதிகளுக்குரியது எனவும் நான் அரசியல் வாதி எனவும் பதிலளித்துள்ளார். ஆனால் புலிகள் அழிக்கப்பட்டதால் தான் தாம் அரசியல் பேசும் வாய்ப்புக் கிடைத்தது என்று இன்னொரு நேர்காணலில் தான் அரசியல் வாதி என ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியிருக்கிறார்.
இன்னொரு நேர்காணலில் வடமாகாணத்திற்கு அங்கீகாரம் கேட்கவே தேர்தலில் பங்காற்றுகிறோம் என்று வடக்குக் கிழக்கு பிரிக்கப்பட்டமையை அங்கீகரிக்கிறார்.
இன்று சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையை மக்களது அங்கீகாரத்தோடு நிராகரிக்கும் தோற்றப்பாட்டை உருவாக்கவே விக்னேஸ்வரன் முடுக்கிவிடப்பட்டுள்ளார்.
தமிழ்ப் பேசும் மக்களின் தன்னுரிமைக்கான போராட்டத்தினை நிராகரிக்கும் இரண்டு குழுக்களுக்கு இடையேயான மோதலாகவே வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறுகிறது. இலங்கை இந்திய அரசுகளிடம் நட்புரீதியான உறவைப் பேணும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் டக்ளஸ் குழுவும் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு அடிப்படையில் எதிரானவர்கள். வடக்கு மக்கள் இந்தத் தேர்தலை நிராகரிப்பதைத் தவிர வேறு வழிகள் இல்லை.