Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சுயநிர்ணைய உரிமைக் கோரிக்கையக் கைவிட்ட கூட்டமைப்பு:பின்புலத்தில் திட்டமிட்ட சதி

TNA-MPs_Washingtonஇலங்கை ஒன்றுபட்ட நாடு என்பதை ஏற்றுக்கொள்கிறோம் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்கிறோம், தனி நாடுக் கோரிக்கையைக் கைவிடுகிறோம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒப்புதல் வாக்குமூலம் வழங்கிவிட்டு தேசியம் என்ற பெயரைச் சுமந்து இன்னும் கட்சியை நடத்தி வருகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் கூட்டணிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெயர் மற்றும் யாப்பு தனி இராச்சிய கோரிக்கையை முன்னிலைப்படுத்தியதாக அமைந்துள்ளது என்பதனை பகிரங்கப்படுத்துமாறு கோரி இனப்பற்றுடைய தேசிய இயக்கம் உள்ளிட்ட ஆறு அமைப்புக்கள் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்தன.

வட-கிழக்கில் வாழும் தமிழர்கள் மீது பேரினவாத ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டு திட்டமிட்ட இனப்படுகொலை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இனக்கொலை நாட்டில் ‘சாணக்கியர்களின்’ சாம்பாரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக மக்களை ஏமாற்றியுள்ளது.
தமிழர்கள் பிரிவினை வாதிகள் அல்ல. அவர்கள் மீது பேரினவாத ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுவதால் பிரிந்து செல்லும் உரிமையைக் கோருகின்றனர். ஒரு தேசிய இனம் பிரிந்து செல்லும் உரிமையைக் கோருவது அடிப்படை ஜனநாயக உரிமை. அந்த உரிமையை பேரினவாத அரசு வழங்கும் போது, ஜனநாயக அடிப்படையில் பிரிந்து செல்வதா இணைந்து வாழ்வதா என்பதை தமிழர்கள் தீர்மானிப்பார்கள்.

இலங்கை அரசியல் சட்டங்களின் அடிப்படையில் கூட உரிமையைக் கோருவது தடைசெய்யப்படவில்லை. பிரிந்து செல்லும் உரிமைக்கான கோரிக்கை ஜனநாயக வரம்புகளுக்கு உட்பட்ட சட்டரீதியான கோரிக்கை என ஐ.நா உட்பட சர்வதேசச் சட்டங்கள் கூட அங்கீகரிக்கின்றன என்பது சட்டம்பிள்ளை விக்கிக்குத் தெரியாத இரகசியமல்ல. பிரிந்து செல்வதற்கான உரிமையைக் கோருவதும், பிரிவினையைக் கோருவதும் ஒன்றல்ல என்ற அடிப்படையைக் கூட நீதிமன்ற்றதில் கூற மறுத்து வழமைபோல தமிழ்ப் பேசும் மக்களைக் காட்டிக்கொடுத்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இக் குறைந்தபட்ச சட்ட விவாதத்தைக் கூட முன்வைக்கத் தவறிய சாணக்கியர்களுடன் இணைந்து சதிவலை பின்னப்பட்டுளதா எனச் சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றன. இதுவரை கால இழப்புக்களையும், தியாகங்களையும் அவமானப்படுத்தி அழித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் தலைமை அல்ல.  புலம்பெயர் நாடுகளில் அரசியல் தலைமைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காட்டிக்கொடுப்புக் குறித்து மூச்சுவிடவும் தயாரில்லை.

இலங்கையை ஒற்றை ஆட்சியுடைய நாடாக ஏற்றுக் கொள்வதாகவும், இலங்கையை இரண்டாகப் பிரிக்கும் எண்ணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா ஆகியோரின் சார்பில் உச்ச நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி கே. கனகஈஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version