அவர்களை நம்பி உலகம் முழுவதும் வாழ்ந்த தமிழர்கள் ஈழப் போராட்டத்தின் நியாயத்தை ஏகாதிபத்திய நாடுகளின் கரங்களில் ஒப்படைத்தனர். உலகம் முழுவதையும் இரத்தம் தோய்ந்த பிரதேசங்களாக மாற்றும் இதே நாடுகள் மீது நம்பிக்கை வைக்க முடியாது என்று கூறியவர்கள் எல்லாம் ஓரம்கட்டப்பட்டனர்.
இன்று தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் அரசியல் நியாயம் அறவே அழிக்கப்பட்டுள்ளது. வன்னின் படுகொலைகளின் பின்னான ஐந்து வருடங்களின் இந்த அழிப்பை புலிகளின் பெயராலும், பிரபாகரனின் பெயராலும் செய்து முடித்திருக்கிறார்கள்.
இன்று வன்னிப் படுகொலை தொடர்பாக எமக்கு மத்தியிலிருக்கும் ஒரே அடையாளம் ஐ.நா போர்க்குற்ற விசாரணை என்பதைத் தவிர வேறில்லை. அந்த விசாரணையும் அமெரிக்காவினதும், பிரித்தானியாவினதும் கட்டுப்பாட்டினுள் மட்டுமே காணப்படுகிறது.
சுய நிர்ணைய உரிமையையும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களையும் அழிப்பவர்களின் கைகளிலிருந்து அதனை மீட்பதற்கான அரசியல் இன்று வரை எம்மிடமில்லை.
இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான போர்குற்ற விசாரணைகளை உடனடியாக நிறுத்துமாறு முன்னாள் அமெரிக்க தூதுவர் தெரேசா ஷேபர், அமெரிக்கா அரசாங்கம் மற்றும் ஜெனிவா மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராத் ஹூசைனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் உதவியுடன் ஜெனிவா மனித உரிமை பேரவையில், சகவாழ்வு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தும் திட்டம் ஒன்றை முன்வைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
விலைபேசப்பட்டு விற்பனை செய்யப்பட்ட சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் நியாயத்திற்கு எதிரான இறுதிக்கட்ட யுத்தம் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.