Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சுயநிர்ணய உரிமையுடன் கூடிய வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம்:தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்வுத் திட்டம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றுக் கூடி தாம் முன்வைத்துள்ள தீர்வுத்திட்டம் தொடர்பாக விரிவாக ஆராய்ந்தனர்.

*இலங்கையில் நீண்டு நிலைத்திருக்கும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விதத்தில் சுய நிர்ணய உரிமையுடன் கூடிய வடக்கு கிழக்கு தாயகம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

* வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பது அங்கீகரிக்கப்பட்டு, அங்கு சுய நிர்ணய உரிமையுடன் மக்கள் வாழ்வதை உறுதிசெய்யும் வகையில் அரசியல் தீர்வு கொண்டுவரப் படவேண்டும். அதற்கு வசதி செய்யும் வகையில் நாட்டின் அரசமைப்புச் சட்டம் அமையவேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தேச அரசியல் தீர்வுயோசனை மேற்கண்டவாறு அமையும் என்று மிகவும் நம்பகமாக தெரியவந்துள்ளது. இந்த யோசனைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் முகமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகவிரைவில் மீண்டும் கூடி ஆராய்வர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

எதிர்வரும் தேர்தலுக்கு முன்னதாக இந்த தீர்வுத்திட்டத்தை முன்வைத்து அதற்கு மக்களின் அங்கீகாரத்தை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூட்டமைப்பு எம்.பிக்கள் வலியுறுத்தினர்.

அடுத்த வாரம் மீண்டும் கூடி உத்தேச தீர்வுத்திட்டத்தை இறுதியாக்குவது என்று நேற்று முடிவு செய்யப்பட்டது.அதேவேளை தேர்தல்கள் தொடர்பான அறிவித்தல் வந்தபின்னர், அதனை எவ்வாறு மேற்சொன்ன யோசனைக்கு ஆதரவு பெற செயற்படுவது என்று குறித்தும் கூட்டத்தில் நீண்ட நேரம் ஆராயப்பட்டதாக தெரியவந்தது. ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படும் சரத் பொன்சேகா முன்வைத்துள்ள கருத்துக்கள் குறித்தும் நேற்றைய கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது என்றும் கூட்டமைப்பு எம்.பி ஒருவர் தெரிவித்தார்.

Exit mobile version