Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சுயநிர்ணயம்- பேரினவாதஅரசு :புதிய ஜனநாயக்கட்சி நிலைப்பாடு.

 புதிய ஜனநாயக் கட்சி நிலைப்பாடு இன்று முக்கியமான ஒரு அரசியல் சக்தியாக உருவாகியுள்ளது. அதன் வளர்ச்சியைத் தடுப்பதற்கு இலங்கைக்குள் மாற்று இடதுசாரி அணி ஒன்றைக் கட்டியெழுப்ப இயலாத உதிரிகள் வெளிநாடுகளிலிருந்து திட்டமிட்ட முறையில் அவதூறு கிளப்பி வருகின்றனர்.

 புதிய  – ஜனநாயகக் கட்சியை விட எதை ஆதரித்தாலும் சரி என்று நினைக்கிற சில்லரைத்தனம் அவர்களை அபத்தமான நிலைப்பாடுகட்குக் கொண்டு சென்றுள்ளது. கொள்கையளவில் புதிய ஜனநாயக்கட்சி நிலைப்பாட்டை எதிர்க்க இயலாத சிலர் தனிப்பட்ட அவதூறுகளிலும் இறங்கியதைக் கண்டிருக்கிறோம். புதிய ஜனநாயக்கட்சி சொன்னால் அதிலிருந்து  வித்தியாசமாக எதையாவது சொல்ல வேண்டும் என்று நினைக்கிற சில குழுக்களும் உள்ளன.

 புதிய ஜனநாயக்கட்சி ஜனாதிபதி தேர்தலில் பகிஷ்கரிப்பை வலியுறுத்தியதோடு ஏன் பகிஷ்கரிப்புத் தேவை என்றும் மூன்று ட்ரொட்ஸ்கிவாதிகள் எவ்வாறு ஒரு மாற்று அணியின் உருவாக்கத்திற்குத் தடையாகச் செயற்பட்டனர் என்றும் விளக்கியிருந்தனர். அதன் பின்பும் ” வியூகம்” என்கிற அமைப்பு இந்துத்துவாதிகளுடன் கூட்டு வைத்துள்ள சிவாஜிலிங்கத்துடன் அணி சேர்ந்த விக்கிரபாகு கருணாரத்னவை ஆதரிப்பதாக அறிவித்தது அது தவறான முடிவு என்று தனிப்பட்ட முறையில் சொல்லிக் கொண்டாலும் இன்னமும் அத் தவற்றுக்கான விளக்கம் தரப்படவில்லை. வியூகம் தன்னை திருத்திக் கொள்ளுமென எதிர்பார்க்கிறோம்.

 ” நூறு பூக்கள்” என்ற பேரில் தம்மை மார்க்கிச லெனினிசக் கட்சி ஒன்றைக் கட்டியெழுப்பும் குழுவாக அறிவித்துள்ளோர் சிலர் புதிய  – ஜனநாயகக் கட்சிக்கு விடுதலைப்புலி ஆதரவு முத்திரை குத்தவும் ஸ்ரீ.ல.சு.க. ஆதரவு என்று குற்றம் சாட்டுலுமான முன்னுக்குப் பின் முரணான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். சென்ற தேர்தலில் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்க வேண்டும் என்று அறிவித்துத் தங்களைப் பூரணமாக அம்பலப்படுத்திக் கொண்டனர்,

 அது போலவே தீவிர இடதுசாரி அந்தத்தில் நின்று கொண்டு, தங்கள் இணையத் தளங்களில் இருந்து ஒரு அடி வெளியே வைக்காமல், புதிய ஜனநாயக்கட்சிக்கு நொட்டை சொல்லி வருகிற தூய மார்க்சிய லெனினியப் புனிதர்களும் இருக்கிறார்கள்.

 எல்லாருடைய அணுகுமுறைகளும் கொஞ்சம் கொஞ்சம் வேறுபட்டாலும் செய்கிற காரியங்களின் இறுதி இலக்கு ஒன்றுதான். முடிவில் வலது சந்தர்ப்ப வாதமும் இடது தீவிர வாதமும் ஒரே புள்ளியில் தான் போய்ச் சந்திக்கின்றன.

 வெளிவெளியாக அறிக்கை விடுகிற புலம் பெயர்ந்தோரிடையே வளரும் செல்வாக்குக்கு ஆப்பு வைக்கும் முயற்சிகளில் சில தனிமனிதர்கள் தீவிரமாக உள்ளனர். அவர்களுடைய பொய்களை அம்பலப்படுத்துவது கடினம். ஏனெனில் அவை விஷ வித்துக்கள் போல மறைவாகக் கிடக்கின்றன. எனவே தான் அண்மைக் காலங்களில் புதிய ஜனநாயகக் கட்சியை பற்றி பரப்பட்ட அவதூறுகளில் பொதிந்துள்ள முக்கியமான சில பொய்களை மறுப்பது அவசியமெனப் புதிய ஜனநாயக் கட்சியின்  வெளியுறவுக் கற்கைக் குழுவுக்குக் கட்சித்தலைமை அறிவுறுத்தியுள்ளது.

 புதிய ஜனநாயக் கட்சியை ஒரு தேர்தல் அரசியல் கட்சி என்று சிலர் கூறி வருகின்றனர். இது மனமறிந்த பொய். புதிய ஜனநாயக் கட்சி தேர்தல்கள் மூலமோ பாராளுமன்ற அதிகாரத்தின் மூலமோ ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்து சமூகமாற்றத்தைக் கொண்டுவர இயலாது என்பதில்  பூரண தெளிவுடனே இருந்து வந்துள்ளது. தந்திரோபாயமாக யாரையும் ஆதரிப்பதும் தேர்தலில் பங்குபற்றுவதும் பற்றிய தெளிவுடனேயே இருந்து வந்துள்ளது. எந்த ஒரு முடிவையும் கட்சி சந்தர்ப்பவாத நோக்கில் எடுத்ததில்லை.

 புதிய ஜனநாயக் கட்சி  சந்திரிகா குமாரதுங்க ஆட்சியை ஆதரித்தது என்ற அவதூறு ஆதரமோ அடிப்படையோ இல்லாதது. 1994 ம் ஆண்டு யூ.என். பியின் 17 ஆண்டு அராஜகத்தை முடிவுக்கு கொண்டு வர மக்களிடையே இருந்த ஆவலை உணர்ந்தும் தேசிய இனப் பிரச்சனை உட்படப் பல வேறு விடயங்களில் சரியான நிலைப்பாடுகளை எடுத்து அவரது வேலைத்திட்டத்தை மனதிற் கொண்டுமே சந்திரிகாவுக்கு ஆதரவு தெரிவிக்கப் பட்டது. சந்திரிகா தனது வேலைத்திட்டத்திற்கு முரணாக செயற்பட்ட ஒவ்வொரு நிலையிலும் அவரது அரசாங்கத்தை வன்மையாகக் கண்டித்துக் கட்சிப்பத்திரிகையிலும் பிற ஊடகங்களிலும் எதிர்ப்பைத் தெரிவிக்கப் புதிய ஜனநாயக் கட்சி தவறவில்லை.

 ஒருபுறம் புலி ஆதரவு என்றும் மறுபுறம் சுயநிர்ணய உரிமை மறுப்பு என்றும் பிரசாரம் செய்யும் விஷமிகள் புதிய ஜனநாயக் கட்சி தேசிய இனப் பிரச்சனை தொடர்பாக எடுத்து வந்துள்ள உறுதியான நிலைப்பாட்டை அறியாமல் பேசுவதாக நாம் நம்பவில்லை. ஏனெனில் புதிய பூமியின் பல்வேறு இதழ்களிலும் ” New Democracy ” என்ற கட்சியின் தத்துவார்த்த ஏட்டிலும் தேசிய இனப்பிரச்சனை பற்றியும் சுயநிர்ணய உரிமையைப் பற்றியும் புதிய ஜனநாயக் கட்சியின் நிலைப்பாடு தொடர்ச்சியாக எடுத்துரைக்கப்பட்டு வந்துள்ளது.

 புதியபூமி வெளியீட்டகம் வெளியிட்ட நூல்களிற் சிலவற்றில் தேசிய இனப் பிரச்சனை பற்றிய அதன் நிலைப்பாடு தெளிவாக விரித்துக் கூறப்பட்டுள்ளது.
• இன ஒடுக்கலும் விடுதலைப் போராட்டமும்-1988, 1995
• மலையக மக்கள் என்போர் யார் ?  – 1992
• தேசிய ஜனநாயகமும் சுயநிர்ணய உரிமையும் – 1992
• சுயநிர்ணய உரிமையில் முஸ்லீம்கள், மலையக மக்கள்  -1994
• சுயநிர்ணயம் பற்றி  -1991
• தேசியம் அன்றும் இன்றும்  – 1995

 கட்சியின் தேசிய மாநாட்டு அறிக்கையிலும் தேசிய இனப்பிரச்சனை பற்றிய கட்சியின் நிலைப்பாடு தெளிவாகக் கூறப்பட்டு வந்துள்ளது.

 புதிய ஜனநாயகக் கட்சி பிரிவினையைப் பரிந்துரைத்த கட்சியல்ல. சுயநிர்ணய உரிமையை ஏற்பதன் மூலமே இலங்கை ஒரு பல்லின பல் தேசிய நாடாக  ஒற்றுமையாக வைத்திருக்கலாம் என்ற நிலைப்பாட்டிலும்  தேசிய இன ஒதுக்கலுக்கு எதிராகப் போராட ஒரு தேசிய இனத்திற்கு முழு உரிமையும் உண்டு என்பதில் அது தடுமாறியதில்லை. விடுதலைக்கான போராட்டம், மக்கள் போராட்டமாகவும் ஜனநாயகமானதாகவும் ஏகாதிபத்திய எதிர்ப்பிலும் அந்நிய மேலாதிக்க எதிர்ப்பிலும் உறுதியுடையதாகவும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட  அரசியல் இது வரை நோக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டுள்ளது.

 அவதூறுகளைப் பரப்புவோர்  நேர்மையானவர்களல்ல என்பதே நமது மதிப்பீடு. அவர்களிடம் சொற்ப அளவு நேர்மையும் நெஞ்சுரமும் இருந்தால் வைக்கிற குற்றச்சாட்டுக்களைப் பகிரங்கமாக வெளியிடும்படியும் புதிய ஜனநாயக்க கட்சிக்கு அவற்றை தெரியத் தரும் படியும் சவால் விடுகிறோம்.

 இனப்படுகொலை ஆட்சியாளர்களிடம் சலுகைகளை வேண்டி நிற்கிற உதிரிக் கூட்டங்களுடன் குலாவிக் கொண்டு நேர்மையான ஒரு மார்க்சிய லெனினியக் கட்சியை இழிவு படுத்துகிற முறையில் பொய்களைப் பரப்பி வருகிறவர்களை அம்பலப்படுத்துவது புலம் பெயர்ந்தோர் நடுவேயுள்ள நல்லவர்களின் கடமை.
 

  புதிய ஜனநாயகக் கட்சியின்
   வெளியுறவு கற்கைக்குழு

Exit mobile version