Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சுன்னாகம் போலி நிபுணர் குழுவைத் தொடர்ந்து இனப் பிரச்சனைக்கும் நிபுணர்குழு :புலம்பெயர் ஏற்றுமதி அமைப்பு அறிவிப்பு

tpcபுலம்பெயர் நாடுகளிலுள்ள பிழைப்புவாதக் குழுக்களால் தீர்மானிக்கப்பட்டு அவர்களின் நேரடித் தலையீட்டில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை என்ற பொறிக் கிடங்கு, தமிழ்ப் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றைத் தயாரிப்பதாக அறிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களின் முன்னர் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனின் ஆசியுடன் அமைக்கப்பட்ட போலி நிபுணர்குழு ஒன்று சுன்னாகம் நீர் நஞ்சான விவகாரம் தொடர்பாக மக்கள் விரோத அறிக்கையை வெளியிட்ட அதிர்வலைகள் ஓய்ந்து போகும் முன்னரேயே புதிய நிபுணர்குழு தயார் தீர்வுத் திட்டத்தைத் தயாரிப்பதாக அறிவித்துள்ளது.

கடந்த தேர்தலில் அமோக வெற்றிபெற்ற யாழ் மையவாதச் சிந்தனை ஈன்றெடுத்த சந்தர்ப்பவாதக் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதான மக்களின் வெறுப்பைப் பயன்படுத்திக்கொண்ட சந்தர்ப்பவாதிகளின் கூட்டான தமிழ் மக்கள் பேரவை சுயாதீனமான மக்கள் சார்ந்த அமைப்பல்ல. புலம்பெயர் நாடுகளில் பெரும் அழிவுகளை ஏற்படுத்திய அரசியல் பிழைப்புவாதிகள் ஏற்றுமதி செய்த அரசியல் பொதி!

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த அதே குழுக்கள், அவரின் தோல்வியைத் தொடர்ந்து, தமது இருப்பை உறுதி செய்துகொள்ள வாடகைக்கு எடுத்துக்கொண்ட நபர்களே விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் ஆகிய மும்மூர்த்திகள். இவர்களின் இணைவில் தோன்றிய தமிழ் மக்கள் பேரவை சுய நிர்ணைய உரிமைக்கான மக்களின் போராட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி அழிவுகளை விரைவுபடுத்த தமது செயற்பாடுகளின் முழு வேகத்தில் ஆரம்பித்துள்ளது.

லண்டன் பகுதியில் புலம்பெயர் பினாமிக் குழுக்கள் தமிழ் மக்கள் பேரவையின் ஒன்று கூடலுக்கான திகதிகளை அறிவித்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இலங்கை அரசிற்கும் எதிராக மக்கள் மத்தியிலிருந்து தோன்ற வல்ல அரசியல் எதிர்ப்புக் குரலை நிபுணர் குழுக்களுக்குள்ளும், பிழைப்புவாதிகளின் சந்தர்ப்பவாத நோக்கங்களுக்குள்ளும் முடக்கும் நோக்கத்துடன் ஆபத்தான புலம்பெயர் வியாபாரிகளின் இத் திட்டங்களை இன்று மக்கள் அறிந்துவைத்திருக்கிறார்கள்.

“அரசியல் என்ற எல்லைகளைக் கடந்து தமிழ்மக்களின் நலன்கள், உரிமைகளை வலியுறுத்துவதையும் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்ட தமிழ்மக்கள் பேரவை தனது பணியை மிகவும் அடக்கமாகவும் உறுதியாகவும் முன்னெடுத்துச் செல்கின்றது.”

என்று ஆரம்பிக்கும் தமிழ் மக்கள் பேரவையின் கேலிக்கூத்தான அறிக்கை மக்களிடமிருந்து அரசியலை நீக்கம் செய்கிறது.

நீரின் விலை அதிகரித்தால் கூட மக்கள் அரசிற்கு எதிராகச் சிந்திக்க ஆரம்பிப்பார்கள். ஆக, நீரிலும் அரசியல் உண்டு. உண்மை இவ்வாறிருக்க அறுபது வருடங்களுக்கு மேலாக நீடிக்கும் தேசிய இனப்பிரச்சனைக்கு அரசியல் வேண்டாம் என்கிறது இக் குழு.

தீர்மானம் நிறைவேற்றுவது, அறிக்கைகள் விடுப்பது, ஆய்வுகள் நடத்துவது போன்றவற்றை மட்டுமே கடந்த காலம் முழுவதும் நடத்திய இக்குழுவின் தனி மனிதர்கள் தமது செயற்பாடுகளில் மட்டும் மக்களுக்கு எதிரான நடவடிக்களில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version