Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சுன்னாகம் சந்தையில் சாரைப்பாம்பு

நீர் அருந்தலாமா இல்லையா : பதில் இல்லை
நீர் அருந்தலாமா இல்லையா : பதில் இல்லை

சுன்னாகம் அனல் மின் நிலையத்தில் மக்கள் குடியிருப்புக்களை நோக்கிச் செலுத்தப்பட்ட அதி பார டீசல் எண்ணைக் கழிவுகளால் நாசப்படுத்தப்பட நிலக்கீழ் நீரை அருந்தலாமா இல்லையா என்ற கேள்வியை அடிப்படையாக வைத்தே போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இப் போராட்டத்தில் வட மாகாண ஆளுனர், அரச அதிபர், வட மாகாண முதலமைச்சர் ஆகியோரே பொறுப்புக்கூட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
இதற்கு முன்னதாக வட மாகாண சபை நியமித்த நிபுணர் குழு மேற்கொண்ட ஆய்வில் சுன்னாகம் நிலக்கீழ் நீரில் நச்சுப் பதார்த்தங்கள் இல்லை எனத் தெரிவிக்கப்படிருந்தது.
வட மாகாண சபையின் நிபுணர் குழுவின் ஆய்விற்கு முன்னதாக வெளியான அனைத்து ஆய்வுகளும் நீரில் இரசாயனப் பதார்த்தங்கள் கலந்திருப்பதாக் கூறப்பட்டிருந்தை முதல் தடவையாக புதிய அறிக்கை நிராகரித்தது.
இதனால் மக்கள் கொதிப்படைந்திருந்தனர். வடக மாகண சபைக்கு எதிரான உணர்வுகள் சுன்னாகம் மக்கள் மத்தியில் கொதி நிலையைத் தோற்றுவித்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், அறிக்கையின் அடிப்படையில் நீரில் நச்சுப் பதார்த்தங்கள் இல்லை என்று முடிவு செய்யப்பட்டிர்ந்த போதும், பொது மக்களுக்கு நீரை அருந்தலாமா இல்லையா எனப் பரிந்துரை செய்யபடவில்லை.
வட மாகாண சபையின் ஆய்வு முடிவுகளை நம்பி மக்கள் நீரைப் பருகியிருந்தால் இன்னொரு முள்ளிவாய்க்கால் சுன்னாகத்தில் நடந்திருக்கும்.
நாளாந்தம் தமது கிணற்று நீரில் எண்ணை படர்வதைப் காணும் மக்களுக்கு புதிய ஆய்வு போலியானது என்று வகுப்பெடுக்க வேண்டிய தேவை இருக்கவில்லை.
சுன்னாகம் பிரதேசத்தில் பவுசர்கள் வழியாக வழங்கப்படும் நீர் நிறுத்தப்படலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் பரவ ஆரம்பித்திருந்தது. இந்த சூழலிலேயே தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை கால வரையரையற்ற உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டது.
உண்ணாவிரதம் ஆரம்பித்த முதல் நாள் இரவு 8 மணிக்கு அங்கு சென்ற முதலமைச்சர் விக்னேஸ்வரன் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கவில்லை. நீரில் நஞ்சு இல்லையென்று கூறும் வட மாகாண அரசு நீரை அருந்தலாம் எனக் கூறியதற்குத் தயங்கியமை அதன் முகமூடியைக் கிழித்துத் தொங்கப்போட்டது.
போராட்டம் ஆரம்பித்த முதல் நாள் இரவே போலி தேசியவாதிகளின் முகமூடிகளை அகற்றியது போராட்டத்தின் முதலாவது வெற்றி.
இதுவரை காலமும் சுன்னாகம் மக்கள் குடியிருப்புகளில் கால் பதிக்காத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை போராட்டக்காரர்கள் அவர்களின் காலடிக்கே அழைத்து வந்தமை இரண்டாவது வெற்றி.
நீரை அருந்தலாமா இல்லையா என்ற மயக்கத்திலிருந்த மக்கள், தொடர்ந்தும் நீர் வினியோகம் நடைபெறும் என்ற உறுதி மொழியையும், மேலதிக ஆய்வின் பின்னரே இறுதி முடிவு வழங்கப்படும் என முடிவெடுத்தது மூன்றாவது வெற்றி.
இதுவரை சுன்னாகத்தில் நடக்கும் சுற்றுச் சூழல் மீதான கிரிமினல் நடவடிக்கையைப் பார்த்துக்கொண்டிருந்த யாழ் ஆளுனரும் அரச அதிபரும் உண்ணாவிரதிகளிடம் வந்து அவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்வதாகக் கூறியது தொடர் வெற்றி.
நீரைப் பருக வேண்டாம் என்றும், அறிக்கையை ஆராய்ந்து ஒரு கிழமைக்குள் முடிவை அறிவிப்பதாகவும், மத்திய அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து தூய நீருக்கான வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதாகவும் ஆளுநர் மற்றும், அரச அதிபர் உறுதிப்படுத்திய பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.
போராட்டம் தற்காலிக வெற்றியொன்றின் பின்னர் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.
இதையறிந்த புலம்பெயர் தேசியப் பிழைப்புவாதிகள் தேசியவாதி விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டபோது கைவிடப்படாத போராட்டம் அரச அதிகாரிகள் கேட்டுக்கொண்டபோது கைவிடப்பட்டதாக தமது பிரச்சாரத்தை ஊடகங்கள் ஊடாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் முடுக்கிவிட்டனர். தேசிய வாதி என்றால் இவர்கள் என்ன கருதுகிறார்கள்? அவர்கள் தேசியப் பொருளாதாரத்திற்காக அன்னிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக, இனச் சுத்திகரிப்பிற்கு எதிராகப் போராடுகிறவர்களை எல்லாம் தேசியவாதிகளாகக் கருதுவதில்லை. புலம்பெயர் நாடுகளிலிருந்து இவர்கள் நாடத்தும் பிழைப்பிற்குத் தீனி போடுகின்ற அனைவரும் தேசியவாதிகள் தான். சுன்னாகத்தில் நடக்கும் மனித அழிப்பை விரிவுபடுத்த முயன்ற விக்னேஸ்வரன், அதனைப் பார்த்துக்கொண்டிருந்த கஜேந்திரகுமார் போன்ற இத்தியாதிகள் அனைவரும் இவர்களுக்குத் தேசியவாதிகளே.
இந்து மதவெறியன் மோடியையும், தமிழக பாசிஸ்ட் ஜெயலலிதாவையும் தேசியவாதிகளாக்கி அழகுபார்த்த புலம்பெயர் பிழைப்புவாதிகளுக்கு இதெல்லம் பழக்கப்பட்டுப்போன விடையங்கள்.
பிரபாகரனுக்கு ஒளிவட்டம் கட்டி, அமெரிக்கன் வந்து காப்பாற்றுவான் என முள்ளிவய்க்காலில் குந்தியிருக்க வைத்து அழித்த அதே முகங்கள் தான் இன்று தேசியம் பேசுகின்றன. சுன்னாகத்தில் அழிவை ஏற்படுத்தியாவது தேசியப் பிழைப்பு நடத்துவோம் என்று வரிந்து கட்டிக்கொள்ளும் இந்த ருசிகண்ட பூனைகள் உண்ணாவிரதமிருக்கும் வரையில் கூட சுன்னாகம் தொடர்பான எந்த அறிவுமற்றே இருந்தனர்.
மாவீர்ர் நாள், அடுத்த கட்ட ஈழப் போராட்டம், நினைவஞ்சலிகள், மைத்திரி கொடும்பாவி என்று படு பிசியாக தேசியம் செய்யும் புலம்பெயர் அமைப்பு சுன்னாகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாத நிலையிலேயே உள்ளது.
சுன்னகம் சந்தையில் சாரைப்பாம்பு நுளைந்திருந்தால் சிலவேளைகளில் இப் போலித் தேசியவாதிகளின் மஞ்சள் ஊடகங்கள் பரபப்புச் செய்தி எழுதிப் பரவசமடைந்திருக்கக் கூடும்.
பிரித்தானியாவின் ஆளும் கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் சுன்னாகத்தில் அழிவை ஏற்படுத்திய நிறுவனத்தின் இயக்குனர் என்பதாலோ என்னவோ, பிற்போக்கு வாத போலித் தேசியவாதிகள் சுன்னாகத்தைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை.

புலம்பெயர் நாடுகளில் நடைபெற்ற சுன்னாகம் அழிவிற்கு எதிரான எந்தப் போராட்டங்களிலும், உரையாடல் கூட்டங்களிலும் புலம்பெயர் போலித் தேசியவாதிகள் இதுவரை கலந்துகொள்ளவில்லை.

Exit mobile version