Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சுன்னாகம் அழிவைத் தலைமை தாங்கியது நானே :சம்பிக்க ஒப்புதல் வாக்குமூலம்

chunnagam2011 ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டின் சுன்னாம்பு நீர்ப்படுகையில் நச்சுப் படிவுகளை ஏற்படுத்தி பேரழிவுகளைத் தோற்றுவித்துக்கொண்டிருந்த சுன்னாகம் அனல் மின்னிலையத்தின் உள்ளக உற்பத்தியை நிறுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இன்றைய இலங்கை அரசின் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவே இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
சம்பிக்க ரணவக்க ராஜபக்ச அரசில் எரிசக்தி மற்றும் மின்வலு அமைச்சராகவிருந்த காலத்தில் நொதேர்ன் பவர்ஸ் என்ற நிறுவனம் சுன்னாகம் அனல் மின்நிலையத்தில் மின்சார உற்பத்தி நடத்திக்கொண்டிருந்தது.

யாழ்ப்பாணக் குடா நாட்டில் சுன்னாகத்தை மையமாக கொண்ட நிர்ப் படுக்கைகளை நச்சாக்கிற்று. நீரை அருந்தியவர்களுக்குப் புற்று நோய் உருவானது. பயிர்ச்செய்கை அழிந்து போனது. செம்மண் சார்ந்த வளமான நிலப் பகுதியான இணுவில், உரும்ம்பிராய், ஏழாலை, தெல்லிப்பளை, ஊரழு பகுதிகள் எல்லாம் பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டது.

அமைச்சராகவிருந்து ஒரு பெரும் நிலப்பரப்பையே நாசப்படுத்திய சம்பிக்க ரணவக்க இன்று நோதேர்ன் பவர்ஸ் இன் மின் உற்பத்தியை மூடுமாறு உத்தரவிட்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டு நச்சுக் கழிவுகளை வெளியேற்றி சூழலை மாசுபடுத்தக் காரணமாகவிருந்த இத்தாலியரான ஆன்ரியோ கியாக்கபோன் என்பவரை உலகப் போலிஸ்படையான இன்டர்போல் தேடிவருவதாகவும் அவர் தப்பியோடிவிட்டதாகவும் அறிவித்தது.

ஜாதிக ஹெல உறுமைய என்ற சிங்கள பௌத்த அடிப்படைவாதக் கட்சியைச் சார்ந்த சம்பிக்க ரணவக்க நான்கு வருடங்களாக – 2010 இலிருந்து 2014 வரை – குடா நாட்டின் ஒரு பகுதியை நச்சாக்குவதற்குக் காரணமாகவிருந்துள்ளார்.

இன்று நோதேர்ன் பவர்ஸ் நிறுவனம் சூழலை நச்சாக்கியது என்று சம்பிக்க ரணவக்கவே வாக்குமூலம் கொடுத்து அந்த நிறுவனத்தை மூடக் கோரியுள்ளார். ஆக, 2010 ஆம் ஆண்டிலிருந்து நான்கு வருடங்கள் மின்வலு அமைச்சராகவிருந்து சூழலை மாசுபடுத்திய சம்பிக்க இன்டர்போலின் பார்வைக்கு குற்றவாளியில்லையா? இன்டர்போலால் தேடப்படும் எவரும் தமது குற்றங்களைத் தாமே ஒப்புக்கொள்வதில்லை. சம்பிக்க ரணவக்க சூழலை மாசுபடுத்தியதைத் தானே ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த நான்கு வருடங்களாக இந்த அழிவை மேற்கொண்ட ஒருவர் இன்றும் அதே பதவியில் தொங்கிக்கொண்டிருக்க அனுமதிக்க முடியுமா? மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சராகத் தொடர முடியுமா?

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரழந்தவர்கள், குழந்தைப் பேறு அற்றுப்பொனவர்கள், விவசாய நிலங்களையும், குடி நீர் வசதிகளையும் இழைந்து அனாதைகளாக்கப்பட்டவர்கள் போன்ற அனைவருக்கும் சம்பிக்க ரணவக்க பதில் சொல்ல வேண்டும்.

ஊழலை அழிக்கிறோம், குற்றவாளிகளைத் தண்டிக்கிறோம் என்று கூறும் சாம்பார் அரசில் அங்கம் வகிக்கும் அடிப்படைவாதியும் குற்றவாளியுமான சம்பிக்க மட்டும் தண்டிக்கப்படாமலிருப்பதன் பின்னணி என்ன?

2007 ஆம் ஆண்டில் மலேசியாவைத் தளமாகக் கொண்ட எம்.ரி.டி கப்பிடல் என்ற பல்தேசிய வர்த்தக நிறுவனம் இலங்கையில் நோர்தேர்ன் பவர் என்ற நிறுவனத்தின் 80 வீதமான பங்குகளை வாங்கிக்கொண்டது. நோர்தேர்ன் பவர் என்ற நிறுவனத்தை ஜெகான் பிரசன்ன அமரதுங்க என்ற தனி மனிதனே நடத்திவந்தார். நோர்தன் பவர் நிறுவனதினூடாக சுன்னாகம் மின்சார உற்பத்தி நிலையத்தை வாங்கிக்கொண்ட எம்.ரி.டி கப்பிடல் அங்கு மின்சார உற்பத்தியை 2008 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் ஆரம்பித்தது. அதுவரையில் டீசல் பாவிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் 2008 இலிருந்து பேர்னாஸ் கழிவு எண்ணையைப் பயனபடுத்தி உற்பத்தி செய்யப்பட்டது.
கட்டுமானத்துறை, நிதி முதலீடு போன்ற துறைகளில் ஈடுபட்டிருந்த பன்னட்டு நிறுவனமான எம்.ரி.டி கப்பிடல் யாழ்ப்பாணத்திலேயே முதல் தடவையாக மின்சார உற்பத்தியைப் பரிசோதித்தது. போரால் விழுங்கப்பட்ட மக்களின் வாழ்கையின் மீது பரிசோதனை நடத்த ஆரம்பித்த எம்.ரி.டி கப்பிடல் தனது இலங்கைக் கிளையை எம்.ரி.டி வோக்கேர்ஸ் என அழைக்க ஆரம்பிதது.

எம்.ரி.டி வோக்கெஸ் இன் இயக்குனர்களில் ஒருவராக பிரித்தானிய ஆளும் கன்சட்வேட்டிவ் கட்சியின் பிரதான உறுப்பினரும் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டவருமான நிர்ஜ் தேவா என்பவர் செயற்படுகிறார் . ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினரான இவர் பிரித்தானியாவிலேயே ஊழலுக்குப் பேர்போன பேர்வளி.

சூழலை அழிக்கும் வெவ்வேறு நிறுவனங்கள் சட்டத்திலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நிர்ஜ் தேவாவை இயக்குனராகச் சேர்த்துக்கொண்டுள்ளன. இன்றைய இலங்கை அரசின் ஆதரவாளரான தேவா இன்டர்போலின் கண்களிலிருந்து தப்பித்தது எப்படி? தேவா தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளியா இல்லையா?

ராஜபக்சவின் இனக்கொலை அரசில் அங்கம் வகித்த சிங்கள பௌத்தப் பேரினவாதி சம்பிக்க ரணவக்கவிலிருந்து நிர்ஜ் தேவா உட்படப் பலர் யாழ் குடா நாட்டை அழிப்பதில் பங்காற்றியுள்ளனர். இவர்கள் தண்டிக்கப்படாவிட்டால் வேறு வழிகளில் உள்ளே நுளைந்துகொண்டே இருப்பார்கள்.

சுன்னாகம் நொதேர்ன் பவர் நிறுவனத்தை சம்பிக்க மூடுமாறு வழங்கிய உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுமா என்ற சந்தேகங்கள் எழுந்தாலும் கண்துடைப்பிற்காவது சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம். மைத்திரி அரசின் எடுபிடிகளாக மாறியுள்ள புலம்பெயர் ஊடகங்களின் ‘பிரேக்கிங் நியூஸ் ‘ அருவருப்புக்கள் இலங்கையில் சொர்க்கத்தின் வாசல் திறக்கப்பட்டிருப்பதாக பீற்றிக்கொள்கின்றன.

சுண்ணாம்பு நீர்ப் படுக்கைகளில் 2008 ஆம் ஆண்டில் ஆரம்பித்து இன்றுவரை படிந்திருக்கும் நச்சு இன்னும் எவ்வளவு பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பது கணிப்பிடப்படவில்லை.

அந்த நீரைச் சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிப்பதற்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும். குற்றவாளிகள் சிறைப்பிடிக்கப்பட வேண்டும்.

இவை நடைபெறாவிட்டால் தமக்குத் தேவைப்படும் நேரங்களில் யார் வேண்டுமானாலும், எந்த வகையிலும் அழிவுகளை மேற்கொள்ளலாம். மக்களின் நிலங்களை ஆக்கிரமிக்கலாம். உணவிலும் நீரிலும் நஞ்சு கலக்கலாம். சாரி சாரியாக மக்களைக் கொன்று போடலாம்.

இன்று தெரிந்தோ தெரியாமலோ சம்பிக்க ரணவக்க தானும் தான் சார்ந்தவர்களும் மேற்கொண்ட குற்றங்களுக்கு ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதனை ஆதாரமாகக் கொண்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதும், பாதிக்கப்பட்டவர்கள் நியாயம் பெறுவதும், நஞ்சு சுத்திகரிக்கப்படுவதும் அவசியமானது.

Exit mobile version