Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சுன்னாகத்தைத் தொடர்ந்து மன்னாரும் அழிகிறது : சம்பிக்க்க ரணவக்க உறுதிப்படுத்தினார்

மன்னார் கடற்படுக்கையை அழிக்கும் அகழ்வு

சுன்னாகத்தில் நீர் மற்றும் நில வளம் நஞ்சாக்கப்பட்ட செய்தி இனியொருவில் ஆரம்பித்து உலகம் முழுவதும் முள்ளிவாய்காலுக்குப் பின்னான மற்றொரு அவலமாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட மற்றொரு பல்தேசிய நிறுவனமான வேதாந்தாவின் தலைமையில் நடத்தப்படும் கடலடி இயற்கை வாயு அகழ்வு தொடர்பான செய்தியை மின் வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க வெளியிட்டுள்ளார்.

கேரின் இந்தியா என்ற வேதாந்தாவின் உப நிறுவனம் கேரின் லங்கா என்ற அதன் மற்றொரு உப நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் மன்னார் கடற்படுக்கையில் எண்ணை மற்றும் எரிவாயுவிற்கான அகழ்வு இரண்டு இடங்களில் முழுமையடைந்துள்ளதாகவும், மூன்றாவது பகுதியில் ஆய்வுகள் முழுமையடையும் நிலையில் உள்ளதாகவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

விரைவில் இயற்கை வாயு விற்பனையை நிறுவனம் ஆரம்பிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

நைஜீரியா உட்பட பல்வேறு ஆபிரிக்க நாடுகளின் பல பகுதிகளை மக்களின் வாழ்வைச் சிதைத்து அங்கு மக்கள் வாழ முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மன்னாரில் ஏற்படுத்தப்படும் அழிவு கடல் வளத்தை முற்றாகச் சூறையாடும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.

சுன்னாகம் பேரழிவிற்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்கள் மன்னார் கடற்படுக்கையை மையமாகக்கொண்டு ஏற்படுத்தப்படும் அழிவுகளுக்கு எதிரானதாகவும் அமைய வேண்டும். சுன்னாகம், மன்னார் கடற்படுக்கை போன்றன அவசரமாகப் பாதுகாக்கப்பட வேண்டும். அழிவு ஆரம்பமாகிவிட்டதை சம்பிக்க ரணவக்க ஏற்றுக்கொண்டுள்ளார்.

மன்னாரில் அகழ்வு நடத்தப்படும் பிரதேசங்கள், அதன் பின் விளைவுகள் போன்றன தொடர்பான ஆய்வு ஒன்றை அரச நிறுவனங்களுக்கு அப்பால் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Exit mobile version