Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சுன்னாகத்திலிருந்து நடத்தப்படும் அழிவுகளுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

DSC_4628சுன்னாகத்தில் ஆரம்பித்து குடாநாடு முழுவதையும் குடி நீரற்ற, விவசாயத்திற்குப் பயன்பாடற்ற நிலமாக மாற்றும் இலங்கை பேரினவாத அதிகாரவர்க்கத்தின் திட்டத்திற்கு எதிராக தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தினர். லண்டனில் பறை- விடுதலைக்கான குரல் அமைப்பினர் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து இலங்கையில் போராட்டங்கள் ஆரம்பித்தன. சுன்னாகத்தில் கழிவு எண்ணையைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பின்னர் கழிவு எண்ணையை மக்கள் குடியிருப்புக்களில் வெளியேற்றுகின்றனர்.

மலேசியாவைத் தலைமையகமாகக் கொண்ட எம்.ரி.டி வோக்கேஸ் என்ற நிறுவனம் இலங்கையில் இந்த அழிவை நடத்திவருகிறது. இதனால் சுன்னாகம் அனல் மின்னிலையத்திற்கு அருகாமையிலுள்ள நீர் நஞ்சாக்கப்பட்டுள்ளது. பலர் குடி நீருக்காக தமது சொந்த இடங்களை விட்டு இடம் பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

கல்லாக்கட்டுவன், உரும்பிராய், ஊரெழு போன்ற பிரதேசங்களில் திராட்சைப் பயிர்ச்செய்கை முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. நீரை அருந்தியவர்கள் 11 பேருக்கு இதுவரை புற்று நோய் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு பிரதேசமும் மக்களும் திட்டமிட்டு அழிக்கப்படுவதை வாக்குப் பொறுக்கும் கட்சிகள் கண்டுகொள்வதில்லை. மக்களை அணிதிரட்டவும் அவர்ளைப் போராட்டத்திற்குத் தயார்செய்யவும் அரசியல் கட்சிகள் தயாரற்ற நிலையில் மக்கள் சுயமாகப் போராடிவருகின்றனர்.

ரனில் விக்ரமசிங்கவுடன் எம்ரிடி வோக்கசின் இயக்குனர் நிர்ஜ் தேவா

யாழ்ப்பாணக் குடா நாட்டின் நீர் நில வளங்களை அழித்து மக்களின் உயிரைப் பணயம் வைத்து அவர்களின் பணத்தைக் கொள்ளையிடும் எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர் பிரதமர் ரனில் விக்ரமசிங்கவின் நண்பரான நிர்ஜ் தேவா என்பவர். இலங்கை ஆட்சி மாற்றத்தின் பின்புலத்தில் செயற்பட்ட நிர்ஜ் தேவா பிரித்தானிய ஆளும் பழமைவாதக் கட்சியின் நீண்டகால உறுப்பினர்.

ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினரும் கூட. சுற்றுச்சூழலைத் தெரிந்துகொண்டே மாசுபடுத்தல் என்பது கிரிமினல் குற்றமாகும் என்று பிரித்தானியச் சட்டங்கள் கூறும் போது நிர்ஜ் தேவா இலங்கை ஆளும் கட்சியுடன் இணைந்து வடக்கின் ஒருபகுதியை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

ஆக, இலங்கையின் ஆளும் கட்சியின் ஆதரவுடன் இந்த அழிப்புத் தொடரும். இலங்கையிலும் பிரித்தானியாவிலும் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்துவதனூடாகவே அழிவுகளை மட்டுப்படுத்தலாம்.

தொடர்பான பதிவுகள்:

சுன்னாகம் அனல் மின் நிலையத்தை மூடுமாறு போராட்டம்
கல்லோயாவிலிருந்து வெலிவேரிய ஈறாக சுன்னாகம் வரை
இனவழிப்பிற்கு எதிராக முழங்கிய பறை
நமது மண்ணையும் மக்களையும் அழிவிலிருந்து பாதுக்காக உதவுவோம்: ஆர்பாட்டத்திற்கு அழைப்பு
தண்ணீர் கேட்டவர்கள் பயங்கரவாதிகளாக்கப்பட்டனர் : புலம்பெயர் தமிழர்களுக்குச் சவால்
திட்டமிட்டு அழிக்கப்படும் யாழ்ப்பாணம்: நீர் நஞ்சாக்கப்படுகின்றது

Exit mobile version