Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சுதேசி இயக்கத்தை எந்த கட்சியும் சொந்தம் கொண்டாட முடியாது!: டி. ராஜா

  சுதேசி இயக்கத்தை எந்த கட்சியும் சொந்தம் கொண்டாட முடியாது என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா வெள்ளிக்கிழமை தெரிவித்தார். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் சுதேசி இயக்கம் குறித்த 2 நாள் மாநில கருத்தரங்கம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2-ம் நாள் கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு டி. ராஜா மேலும் பேசியதாவது: 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் சுதேசி கருத்து, இயக்கம் வடிவம் பெற்றது. பெரிய அளவில் உருவானது. ரஷியாவில் ஏற்பட்ட புரட்சியின் தாக்கம் இந்தியாவுக்கும் வந்தது.

 தென் மாவட்டங்களில் வ.உ.சி. மட்டுமன்றி சுப்பிரமணிய சிவா, சுப்பிரமணிய பாரதி ஆகியோரும் மக்களோடு வாழ்ந்து சுதேசி இயக்கங்களை முன்னெடுத்து சென்றனர்.

 இந்த காலகட்டத்தில்தான் இந்திய அளவில் அரசியல் வர்க்க சக்திகள் உருவாகின. தொழிற்சங்கங்கள், புதிய வர்த்தக அமைப்புகள், மூலதன சக்திகள் தோன்றின.

 தொழிலாளர்கள், விவசாயிகள், எழுத்தாளர்கள், மாணவர்கள் அணி திரண்ட காலம். சுதேசி என்பது நாடு தழுவிய கருத்தாக உருவானது. இதில் எந்த கட்சியோ, தனிபட்ட நபரோ சொந்தம் கொண்டாட முடியாது. இதில், எல்லோருக்கும் பங்கு இருக்கிறது. சுதேசி என்பது பொருளாதார தேசியம் மட்டுமல்ல. அது அரசியல், சமூக ரீதியான கருத்தாகவும் உருவானது. பொருளாதார, அரசியல், சமூக தன்னிறைவு பெறுவதுதான் சுதேசியம்.

 சுதேசிய கருத்துக்களை வலியுறுத்திய தலைவர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால், நம்முடைய நாடு வளர வேண்டும். நாட்டு மக்கள் வளம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சுதேசி கருத்து மேலோங்கி நின்றது. வ.உ.சி. கப்பல் ஓட்டியதில் இருந்து டாடா நிறுவனம் தொடங்கியதுவரை அனைத்துமே சுதேசியம்தான் என்றார்.

 

Exit mobile version