Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சுதந்திரமான விசாரணை தேவை இரண்டு வருடங்களின் பின்னர் மீண்டும் கமரன்

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இலங்கைப் பற்றி கேட்கப்பட்ட போது பதிலளித்துள்ள பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரோன், இலங்கையில் என்னதான் நடந்தது, போர்க்குற்றங்கள் நடந்தனவா, அவற்றுக்கு யார் பொறுப்புக்கூற வேண்டும் என்பவற்றை முழுமையாகக் கண்டறிவதற்காக முறையான, சுயாதீனமான, விசாரணை நடைமுறைகள் அவசியம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, பிரிட்டனின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் சேர் மல்கொம் ரிஃப்கின் உட்பட பொதுநலவாய நாடுகளின் முக்கிய பிரமுகர்களை உள்ளடக்கிய குழுவொன்று, கொமன்வெல்த் நாடுகள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் பற்றி ஆராய்ந்து 100க்கும் அதிகமான பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பு 21ம் நூற்றாண்டு உலகுக்கு பொருத்தமாக அமைய வேண்டும் என்ற கோரிக்கை இந்த முயற்சியில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உரிமைகள் மற்றும் சுதந்திரம் தொடர்பான புதிய சமவாயம் ஒன்றை உருவாக்குவது பற்றியும் டேவிட் கமரோன் கருத்து வெளியிட்டுள்ளார்.
இதுதவிர இன்னும் சர்ச்சைக்குரிய விவகாரமாக, மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி பற்றிய சுயாதீனமான ஆணையர் ஒருவரை நியமிப்பது பற்றியும், ஒருபால் உறவு திருமணங்களை தடைசெய்யும் சட்டங்களை நாடுகள் நீக்கவேண்டும் என்ற கோரிக்கை தொடர்பிலும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பேர்த் நகரில் போராட்டம்
இதேவேளை, காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று கோரி பேர்த் நகரில் தமிழர் அமைப்பகள் போராட்டங்களை நடத்தியுள்ளன.
இலங்கைப் போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் படையினரால் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதாகவும் காட்டும் படங்களையும் பதாகைகளையும் தாங்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Exit mobile version