டோரன்டோவில் மாவீரர் வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய இயக்குனர் சீமான், பிரபாகரன் என்ற மாமேதையின் கையில் ஒரு நாடு அல்லது தேசம் இருந்தால் உலகத்தின் வல்லரசாக சில வருடங்களிலேயே வந்துவிடும்.
பிரபாகரனின் ஆட்சியைப் பார்த்து, தமிழ்நாட்டு அரசை விமர்சிப்பார்கள் என்ற பயம், துணிவான தூய்மையான நீதி, நிர்வாகம், கட்டுக்கோப்பான அரசு என்ற பெருமையை ஈழத்தமிழன் பெற்று விடுவான் என்ற பயம். ஊழல் இல்லாத தமிழீழத்திற்குப் பயந்த ஊழல் மிக்க ஒரு அரசாட்சி, பிரபாகரன் என்ற மாமேதை அழிக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்தது.
பிரபாகரனை நான் அண்ணன் எனக் கூறினால் என்னைப் புலி என்கிறார்கள். பிடி என்கிறார்கள். கற்பழித்தவன், கொலை செய்தவன், எரித்தவன், பள்ளியில் குண்டு போட்டவன் ஒருவரும் பயங்கரவாதிகள் இல்லை. கற்பழிக்காத கொலை செய்யாத, போர்க்கைதிகளைப் பாதுகாத்த புலிகள் இயக்கம் பயங்கரவாதிகள் இயக்கம் எனச் சொல்லுகிற பயங்கரவாதத்தை என்னென்று கூறுவது.
ஈழத்தமிழனுக்கு ஏற்ற ஒரு அரசாட்சி எம்.ஜி.ஆர். அவர்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் வரவே இல்லை. விடியலுக்குப் போராடிய விடுதலைப் புலிகள் எதிரியோடு போராடியிருந்தால் இந்நேரம் வென்றிருப்பார்கள்.
ஆனால், ஊழல் நிரம்பிய தமிழ் எதிரிகளோடும் அவர்கள் போராட வேண்டியிருந்தது. ஆனால், இந்த வரலாறு தமிழனுக்குத் தோல்வி இல்லை. துடித்து எழும். தமிழீழத் தேசம் பிறக்கும் என்றார்.
இந்த நிலையில் சட்டவிரோதமாக பேசியதாக கூறி கனடா காவல்துறையினர் சீமானைக் கைது செய்தனர்.
இதை அந்த நாட்டு எல்லைச் சேவைப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் பாட்ரிசியா கிலோட்டி உறுதி செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், கனடாவின் சட்ட திட்டங்களுக்கு எதிராக பேசியதால் குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் இந்தியாவைச் சேர்ந்த செபாஸ்டியன் சீமானைக் கைது செய்தனர்.
பாதுகாப்பு கருதி அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. அவரும் ஒப்புக் கொண்டார் என்றார்.
சீமானின் வழக்கறிஞர் ஹதயாத் நஸாமி கூறுகையில், பாதுகாப்பு காரணத்திற்காக சீமானை நாட்டை விட்டு வெளியேற்ற குடியேற்றத் துறை தீர்மானித்தது. இருப்பினும் தானே செல்வதாக சீமான் கூறினார் என்றார்.
இதைத் தொடர்ந்து நேற்று இரவு சீமான் கனடாவை விட்டு இந்தியா கிளம்பினார். நேற்று இரவு சீமான் ஒரு கூட்டத்தில் பேசுவதாக இருந்தது. அதேபோல ஞாயிற்றுக்கிழமை மான்ட்ரீலில் பேசுவதாக இருந்தார்.
http://www.nationalpost.com/news/canada/story.html?id=2273146