கடலூரில் இன்று நடைபெறவிருந்த நாம்தமிழர் கட்சியின் கூட்டத்திற்கு ஜெயலலித அரசு தடைவிதித்துள்ளது. கூட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தும் ஜெயலலிதா அரச காவல்துறை தடைவிதித்துள்ளது. நடிகரும் இயக்குனரும் ஜெயலலித ஆதரவாளருமான சீமானின் கட்சியான நாம் தமிழர் கட்சி புலம் பெயர் தமிழர்களை மையப்படுத்தி இயங்கிவரும் கட்சியாகும். நாம் தமிழர் கட்சியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை கண்டித்து கடலூரில் இன்று பொதுக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக நடத்தப்படும் பொதுக்கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராதிகா, மாவட்ட கலெக்டர் கிர்லோஷ் குமாருக்கு பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட கலெக்டர், கூட்டத்துக்கு தடை விதித்தார்.
இது தொடர்பான நோட்டீஸ் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கடல் தீபனிடம் காவல்துறையினர் அதிகாலை 2.30 மணிக்கு அளிக்க சென்றனர். ஆனால் அவர் நோட்டீசை வாங்க மறுத்துவிட்டார். இதையடுத்து, அவரது வீட்டின் கதவில் நோட்டீஸை காவல்துறையினர் ஓட்டினர்.
இதைத் தொடர்ந்து கடலூரில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பேனர்களை காவல்துறையினர் இரவோடு இரவாக அகற்றினர்.