பேரினவாத இலங்கை அரசால் முள்ளிவாய்க்காலில் தமிழர்களில் சாரிசாரியாகக் கொல்லப்பட்ட பின்னர் தமிழக அரசியல்வாதிகளின் ஈழத் தமிழ் வியாபாரம் உச்ச நிலையை அடைந்தது. வாக்குப் பொறுக்கும் தேர்தல் கட்சிகள், சினிமாக் காரர்கள், இந்திய அரசு என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கத்தில் ஈழத் தமிழர்களை மையமாக வைத்து அரசியல் வியாபாரம் நடத்தி வருகின்றனர். ஒரு புறத்தில் தமிழகத்தின் முள்வேலி முகாம்கள் போன்ற ஒதுக்கப்பட்ட பிரதேசங்களில் மிருகங்கள் போல ஈழத் தமிழ் அகதிகள் சிறைவைக்கப்பட்டிருக்க மறுபுறத்தில் ஈழத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடுகிறோம் என்ற அரசியல் கேலிக்கூத்து ஆரம்பித்தது.
ஈழத் தமிழர்களின் அவலங்களை முன்வைத்து நடைபெறும் புலம்பெயர் வியாபாரத்தோடு ஒத்துழைப்பின் அடிப்படையில் செயற்படும் தமிழக அரசியல் வியாபாரம் ஒரு குறித்த அரசியல் சார்ந்ததாக அல்லாமல் சம்பவங்களை முன்வைத்து நடைபெற்றுவதால் இலகுவாக இலாபமீட்டும் நிலை காணப்பட்டது.
அண்மைக் காலமாக லைக்கா குழுமம் என்ற ஈழத் தமிழர் ஒருவரின் முதலீட்டில் இயங்கும் நிறுவனத்தின் இலங்கை அரசுடனான வியாபார ஒப்பந்தங்கள் தொடர்பான ஆதாரங்கள் வெளியாகின, ஆங்கிலத்தில் இலங்கையிலிருந்து வெளியாகும் சண்டே லீடர் மற்றும் பிரித்தானியாவை மையமாகக் கொண்ட கோப்ரட்வாச் போன்ற இணையங்கள் லைக்காவின் இலங்கை அரச தொடர்புகள் குறித்த ஆதரங்களை வெளியிட்டன. தமிழில் இனியொரு பல புதிய தகவல்களை வெளியிட்டது.
தகவல்களை மக்கள் சார்ந்த அரசியலாகப் போராட்டங்களை முன்னெடுப்பதற்குப் பதிலாக அவற்றை தமது வயிற்றுப் பிழைப்பிற்காகப் பயன்படுத்தும் சமூகவிரோதக் கும்பல்கள் லைக்காவிற்கு எதிரான போராட்டங்களைப் பயன்படுத்திக்கொண்டன. இது லைக்கா போன்ற நிறுவனங்களுக்கு வெறுமனே பணம் சார்ந்த பிரச்சனையாக கையாளக்கூடிய நிலையை ஏற்படுதியது.
இவ்வேளையில் புலிப் பார்வை என்ற சினிமா ஈழப் பிரச்சனையை மையமாக வைத்து தமிழகத்தில் வெளியானது. இத்திரைப்படத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களோடு உடன்படாத சில மாணவர்கள் தமிழகத்தில் போராட்டங்களை ஆரம்பித்தனர்.
இன்று 16/08/2014 புலிப்பார்வை சினிமாவின் இசை வெளியீடு நடைபெற்றது. இசைவெளியீட்டில் கலந்துகொண்ட சீமானை நோக்கியும் ஏனையோரை நோக்கியும் மாணவர்கள் கேள்வியெழுப்பினர். தமக்கு உடன்பாடற்ற பகுதிகள் தொடர்பாக கேள்வியெழுப்பிய மாணவரக்ள் மீது அங்கு தயாரகவிருந்த குண்டர்படை தாக்குதல் நடத்தியது.
தடிகளாலும் இரும்புக் கம்பிகளாலும் சீமானின் நாம்தமிழர் கட்சி, பாரதீய ஜனதாக் கட்சி மற்றும் படத் தயாரிப்பாளர் பச்சைமுத்து ஆகியோரின் ஆட்கள் தாக்குதல் நடத்தியதாக தமிழக ஊடகங்கள் குற்றம் சுமத்தியுள்ளன. தமிழ் நாட்டிலிருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், திரைப்படத்தை சீமான் பாராட்டிப் பேசினார் என்றும் அவரைத் தொடர்ந்து பச்சை முத்து பேச முற்பட்ட போது சீமானை நோக்கிக் கேள்விகளை எழுப்பிக் கூக்குரலிட்ட மாணவர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்த முற்பட்டனர் என்றும் அதனைத் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்றன என்றும் கூறப்படுகிறது.
சீமான் பார்த்துக்கொண்டிருக்க அவரின் கட்சியைச் சேர்ந்தவர்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
குரலெழுப்பிய மாணவர்களுக்கு இரத்தக்காயங்கள் தலை, கால் போன்ற பகுதிகளில் இரத்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அங்கு வந்த ஜெயலலிதா அரசின் காவல்படை மாணவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்று மண்டபம் ஒன்றில் தங்கவைத்தனர். மாணவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை வழங்கப்படவில்லை.
காவல் துறை அங்கு சென்ற வேளையில் அவர்களின் முன்னிலையிலும் தாக்குதல் நடைபெற்றுள்ளது. போலீஸ் ஒருவருக்கும் காயங்கள் ஏற்பட்டதாக மற்றொரு தகவல் கூறுகின்றது. இப்போது மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முற்போக்கு மாணவர் முன்னணி என்ற அமைப்பைச் சேர்ந்த தலைமை ஒருங்கிணைப்பாளர் மாறன், தமிழீழ மாணவர் பேரவையைச் சேர்ந்த செம்பியன் உட்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
சிறுவகையான மாபியா அமைப்புக்கள் போன்று தமக்கு நேரடியாகத் தொடர்பற்ற பிரச்சனையான ஈழத் தமிழர் பிரச்சனையில் நேரடித் தலையீடு செய்யும் நாம் தமிழர் கட்சி உட்பட்ட அமைப்புகள் தம்மை சுழவுள்ள பிரச்சனைகளில் தலையிடுவதில்லை. குறிப்பாக தமிழ் நாட்டில் மூன்று தசாப்தங்கள் வரை சிறை வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் பிரச்சனை இவர்களுக்குத் தெரிவதில்லை.
லைக்காவிற்கு எதிரான ஈழத் தமிழர்களின் அரசியல் வலுவுள்ள போராட்டங்கள் சிதைக்கப்பட்டதைப் போன்றே சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தைச் சிதைத்தலிலும் தமிழக அரசியல் பிழைப்புவாதிகளுக்கும் பங்குண்டு.
லைக்காவைப் போன்றே இலங்கையில் கல்வி வியாபாரம் நடத்தும் பச்சைமுத்து சினிமாவிலும் முதலிடுபவர். தமிழகத்திலும் இலவசக் கல்வியை அழித்தவர்களில் பச்சை முத்து பிரதானமானர், புதிய தலைமுறை என்ற தொலைக்காட்சியையும் பச்சைமுத்துவே நடத்திவருகிறார். திடீரென தமக்குத் தொடர்பில்லாத பிரச்சனைகளுக்காகப் போராடுகிறோம் என்று புறப்படும் தமிழக அரசியல் தலைகள் தமது சொந்த நாட்டிலேயே பச்சைமுத்து போன்ற விச விருட்சங்களுக்கு எதிராக மூச்சுக்கூட விட்டதில்லை.
புலம்பெயர் நாடுகளிலிருந்து பெற்ற முதலீடுகளை வைத்து தனக்கென ஒரு விம்பத்தை வளர்த்துக்கொண்ட சீமான், தனது வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு வளர்த்தெடுக்க முற்படும் போது முரண்பாடுகள் தோன்றின. விஜய் ரசிகர் சங்கம், பச்சைமுத்து லைக்கா போன்ற பல்தேசிய முதலாளிகளின் ஆதரவு போன்றவற்றுடன் தேர்தலில் குறித்த வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முயலும் சீமான் புலம்பெயர் முகவர் என்ற வட்டத்தினுள் மட்டும் இல்லை.
இங்கு எஸ்.ஆர்.எம் குழுமத்தை நடத்தும் பச்சைமுத்துவும்(பாரிவேந்தர்) லைக்காவும் இலங்கை தொடர்புடைய ராஜபக்ச குடும்பத்துடன் வியாபாரம் செய்யும் நிறுவனங்கள். ஈழத் தமிழர்களின் கண்ணீரை வியாபாரமாக்கும் புதியவர்களுக்கான தேடலில் இப்போதைக்கு மாணவர்கள் வலை வீசப்படுகின்றனர் என்றே தோன்றுகிறது.
தமிழ் நாட்டில் வறுமையின் பிடியில் அழிந்துகொண்டிருக்கும் தமிழர்களைக் கடந்து, சாதி ஒடுக்குமுறை போன்றவற்றால் அழிக்கப்படும் தமிழர்களைக் கடந்து தமக்குத் தொடர்பற்ற ஈழத் தமிழர்கள் பிரச்சனைகளை மட்டுமே அரசியலாகக் கொணவர்களுக்கு நாகரீகமாகச் சூட்டப்பட்ட பெயர் உணர்வாளர்கள்.
உணர்வாளர்கள் ஈழத் தமிழர் பிரச்சனை குறித்துப் பேச வேண்டுமாயின் தமிழகத்தில் 30 ஆண்டுகளாகச் சிறைவைக்கப்பட்டிருக்கும் அகதிகளுக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பது முன்னிபந்தனையாக்க வேண்டும்.
2010 ஏப்ரல் மாதம் அரசால் வெளியிடப்பட்ட ஒரு புள்ளிவிவரம், தமிழகத்திலுள்ள 113 முகாம்களில் 19,916 குடும்பங்களைச் சேர்ந்த 73,251 பேர் அகதிகளாகத் தஞ்சமடைந்திருப்பதாகக் குறிப்பிடுகிறது. மாட்டுக்கொட்டகைகளை விடக் கேவலமான முறையில் அமைக்கப்பட்ட இந்த முகாம்கள் கியூ பிரிவின் கண்காணிப்பின் கீழ் செயற்படுகின்றன. மாலை 6 மணிக்குள் முகாமிற்குத் திரும்பிவிட வேண்டும்; வெளியிலோ, வேறு முகாமிலோ தங்கியுள்ள தமது உறவினரைப் பார்க்கப் போக வேண்டுமென்றால் வட்டாட்சியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். முகாம்களிலேயே பிறந்து வளர்ந்த குழந்தைகளுக்குக் கூட எந்த அடிப்படை உரிமையும் வழங்கப்படவில்லை.
அனாதைகளாக விடப்பட்டுள்ள இந்த அகதிகளுக்கு ஆதரவாக யாரும் செயற்படுவதில்லை. ஈழ அரசியல் வியாபாரத்திற்குப் போதிய பணம் இவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள இயலாதிருப்பதும் , உள்ளூர் ஆளும் வர்க்கங்களைப் பகைத்துக்கொள்ள விரும்பாததுமே உணர்வாளர்கள் இவர்களைக் கண்டுகொள்ளாததன் காரணம். ஒரு அகதிப் பரம்பரை உருவாகி வளர்ந்துகொண்டிருக்கிறது. வேலைக்குச் செலவதற்கோ, உயர்கல்வி கற்பதற்கோ இவர்களுக்கு உரிமை இல்லை. சர்வதேசிய அளவில் வழங்கப்படுகின்ற எந்த அடிப்படை உரிமைகளும் இவர்களுகு வழங்கப்படுவதில்லை. ஈழத் தாய் ஜெயலலிதாவும் கருணநிதியும் வழங்க மறுத்த இந்த உரிமைகளுக்காக உணர்வாளர்கள் போராடியதில்லை.
சீமானின் உரை:
பாரிவேந்தர் பச்சைமுத்து தொடர்பாக:
SRM University opens campus in Sri Lanka
திவாலாகும் தீபம் தொலைக்காட்சியும் தெருவில் விடப்பட்ட ஊழியர்களும்!
மாணவர் தரப்பு: