Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சீனாவில் வன்முறை தொடருகிறது: பலியானவர்களின் எண்ணிக்கை 156 .

 

சீனாவின் மேற்குப் பகுதியிலுள்ள உறும்கி நகரில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில் 1,434 பேர் இதுவரை கைது செய்யப்பட்டும் உள்ளனர்.இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டங்களின் போது இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 156 ஆக அதிகரித்துள்ளது.

முஸ்லிம்களின் சிறுபான்மை இனத்தவரான உய்கர்களால் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் தடியடிப் பிரயோகம் மேற்கொண்டதை அடுத்து அங்கு கலவரம் ஏற்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலவரத்தின்போது 143 பேர் பலியாகியும் 828 பேர் காயமடைந்த நிலையில், பொலிஸாரினதும் படையினரதும் பிரயத்தனத்தைத் தொடர்ந்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் திங்கட்கிழமையும் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களும் கலவரங்களும் சீனாவின் உறும்கி நகரில் நடைபெற்றுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் (உய்கர்கள்) கலவரங்களில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பொல்லுகள், தடிகள், கற்கள் சகிதம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சீனாவின் இயல்பு நிலையைப் பாதித்திருக்கும் இவ் வன்முறைச் சம்பவங்களுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் சீன அரசும் உய்கர் இனமும் பரஸ்பரக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

குவான்டோங் மாகாணத்திலிருந்து ஆயிரம் மைலுக்கு அப்பாலுள்ள விளையாட்டுப் பொருட்கள் தொழிற்சாலை ஒன்றில் உய்கர் மற்றும் ஹான் சீனர்களிடையே இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்தே இவ் வன்முறைச் சம்பவங்கள் தீவிரம் அடைந்தன.

இதுவரை நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது 156 பேர் பலியாகியுள்ளதாகவும் இவர்களில் அநேகமானோர் ஹான் சீனர்களென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பலியானவர்களில் 90 வீதமானவர்கள் உய்கர் அமைப்பினர் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உறும்கியில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் பெண்களே அதிகளவில் கலந்துகொண்டுள்ளதுடன், “எமக்குரிய சுதந்திரத்தை வழங்கு’, எமது ஆண்களை விடுதலைசெய் என்றும் கோசமிடுகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்தும் முயற்சியில் கேடயங்களுடனும் தடிகளுடனும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கலையத் தொடங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

Exit mobile version