Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சீனாவின் புதிய தலைவர்கள் : மக்கள் விரோதிகள்

கடந்த வியாழன் அன்று வெளிவந்துள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) நிரந்தர அரசியற் குழுவின் ஏழு உறுப்பினர்களுடைய வாழ்க்கைக் குறிப்புக்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அழிந்து சிதைந்து போனதற்கான ஆதரமாகும்.
இவர்களுக்கு 1949 சீனப் புரட்சியுடன் எந்த தொடர்பும் இல்லாததுடன், கடந்த 30 ஆண்டுகளாக நடைபெறும் முதலாளித்துவ மீட்சியினால் சொத்துக்களைக் கையகப்படுத்திக்கொண்ட தரகு முதலாளித்துவ வர்க்கத்தை இவர்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.
பதவியிலிருந்து வெளியேறும் ஜனாதிபதி ஹு ஜின்டாவோ தலைமையில் உள்ள இளைஞர் கம்யூனிஸ்ட் கழகத்திற்கும் (YCL) முன்னாள் ஜனாதிபதி ஜியாங் ஜெமின் ஆல் தலைமை தாங்கப்பட்ட “ஷாங்காய் கும்பலுக்கும்” இடையே அதிகார மோதல்கள் நிகழ்ந்தன.
புதிய பொதுச் செயலாளர் ஜி ஜின்பிங் இரண்டு முக்கிய பிரிவுகளாலும் ஏற்கப்பட்டுள்ள ஒரு சமரசத்திற்குரிய புள்ளி ஆவார். பதவியேற்கவிருக்கும் பிரதமர் லி கெக்கியாங்தான் இளைஞர் பிரிவுடன் தொடர்பு கொண்டவர். லியு யுன்ஷான் மற்றும் வாங் குஷன் இருவரும் இரு பிரிவினராலும் ஏற்கப்பட்டவர்கள். மற்ற மூன்று நபர்களான ஜாங் டிஜியாங்க், யு ஜெங்ஷாங் மற்றும் ஷாங் காவோலி ஆகியோர் ஷாங்காய் தன்னலக்குழுவுடன் நெருக்கமான தொடர்பு உடையவர்கள் ஆவர்.
ஜி ஜின்பிங் அதிகாரத்தில் உயர்ந்துள்ளதற்குக் காரணம் அவருடைய தந்தை ஜி ஜோங்சன், மாவோவினால் 1962ம் ஆண்டு “முதலாளித்துவப் பாதையை நாடுபவர்” என்று காரணம் காட்டி வெளியேற்றப்பட்ட ஒரு மூத்த அதிகாரத்துவ தட்டினர் ஆவார். டெங் ஜியோபிங் அதிகாரத்திற்கு 1978ல் வந்தபோது அவரை ஷென்ஜெனில் முதல் “சிறப்புப் பொருளாதார வலையங்களை” நிறுவ நியமித்தபோது ஜோங்சனின் அரசியல்வாழ்க்கை புதுப்பிக்கப்பட்டது. இளம் ஜி 22 ஆண்டுகள் கடலோர மாநிலங்களான புஜியன், ஜெஜியாங் போன்றவற்றில் இருந்தார்; அங்கு அவர் தனியார் நிறுவனங்களை உருவாக்கியதால் நன்கு அறியப்பட்டவராக இருந்தார்.

Exit mobile version