இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லவ்ரோவ் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் யாங் ஜெய்ச்சி ஆகிய மூன்று நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் நேற்று பெங்களூரில் நடைபெற்றது. இந்த முத்தரப்பு கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து உருவாகும் பயங்கரவாதம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதற்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது என, தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் சுகாதாரம், விவசாயம், பேரிடர் மேலாண்மை, காலநிலை மாற்றம் மற்றும் உலக பொருளாதார மந்தநிலையின் பாதிப்பை குறைத்தல் போன்ற விஷயங்களில் மூன்று நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்துவது, அதற்கு உத்வேகம் கொடுப்பது என, முடிவு செய்யப்பட்டது.
இந்த ஆலோசனைக்குப் பின், நிருபர்களிடம் பேசிய அமைச்சர்கள் கூறியதாவது: நாங்கள் நடத்திய ஆலோசனைகள் ஆக்கப்பூர்வமானதாக இருந்தன. புதிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து கண்டறிந்துள்ளோம். பொதுவான அணுகுமுறைகள் மற்றும் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் போன்றவை குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் நாடுகளுக்கு இடையே நடைபெறும் குற்றங்களை தடுப்பது போன்றவற்றில் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம், இந்தப் பிராந்தியத்தில் அமைதியை உருவாக்க முடியும் என்று நம்புகிறோம். கடந்த 8ம் தேதி காபூலில் இந்திய தூதரகத்தின் மீது நடந்த தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “மும்பை தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானில் செயல்படும் ஜமாயத் – உத் – தாவா போன்ற அமைப்புகளுக்கும், சில நபர்களுக்கும் தடை விதிக்க வேண்டும்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை கண்டிப்பாக சம்பந்தப்பட்ட நாடுகள் அமல்படுத்த வேண்டும் என, வலியுறுத்துகிறோம். பயங்கரவாதம் எந்த வடிவிலும், எங்கும் தலை தூக்க அனுமதிக்கக் கூடாது. பயங்கரவாத செயல்களை நியாயப்படுத்துவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு நிலைமை மிக மோசமாக உள்ளது. பயங்கரவாதத்தை சர்வதேச சமுதாயம் கடுமையாக கையாள வேண்டும். அதை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் ஸ்திரத்தன்மையை உருவாக்க இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மூன்று நாடுகளின் அமைச்சர்கள் தெரிவித்தனர்.
திபெத்தியர் இரண்டு பேர் கைது: இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் பெங்களூரில் உள்ள ஓட்டல் ஒன்றின் அரங்கத்தில் நடந்தது. இந்த அரங்கத்திற்குள் நுழைய முயன்ற திபெத்தியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். அரங்கத்திற்குள் நுழைய முயன்ற அவர்கள் சீனாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். உடன் போலீசார் அவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அவர்களைப் பற்றிய விவரம் வெளியாகவில்லை.