Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிவகாமியின் வக்கிரத்தனமும் அடையாளக் கும்பல்களும்

sivakamiias‘விடுதலைப் புலிகள் ஈழத் தமிழர்களுக்காகப் போராட்டம் நடத்தும் போது, புலிகளின் இராணுவத்தில் சில பெண்கள் இருந்தார்கள். புலிகளின் இராணுவத்தின் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்ய அவர்கள் பயன்பட்டுத்தப்பட்டார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு வந்த போது அதற்கு என்ன பதில் சொன்னார்கள் என்றால் உயிரையே பணயம் வைத்து நாட்டுக்காக உழைக்கும் போது இது சாதாரணமான ஒரு விடையம் என்பதைச் செய்திகளில் படித்தேன்.’ என்ற வெடிகுண்டைத் தூக்கிப் போட்டவர் சிவகாமி ஐ.ஏ.எஸ் என்ற தலித் நடவடிக்கையளாரும் அரச துறை ஊழியரும் ஆவர். புதிய தலைமுறை என்ற தொலைக்காட்சியின் உரையாடல் நிகழ்வொன்றில் சிவகாமி இப்படிச் சொன்னதும் ஒரு புறத்தில் ‘தமிழ் உணர்வாளர்களும்’, மறுபுறத்தில் ‘ராஜபக்ச உணர்வாளர்களும்’, இவர்கள் இருபகுதியையும் இணைக்கும் பேஸ்புக் உணர்வாளர்களும் உற்சாகமடைந்து விட்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னை நாள் போராளிகள் இலங்கை அரச ஒடுக்குமுறையால் அனுபவிக்கும் வதைகள் நாளாந்த செய்திகளாக வெளிவருகின்றன அதிலும் குறிப்பாக பெண்போராளிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் இலங்கையின் வரலாற்றில் கண்டிராத கோரம். சமூகத்தாலும் குடும்பதினராலும் கூடப் புறக்கணிக்கப்படும் பெண்போராளிகளின் அவலம் இரத்தக்கறை படிந்த புதிய வரலாறு.

இவற்றிக்கும் மேலாக பொய்யான செய்தி ஒன்றை உருவாக்கி பெண்போராளிகள் என்ற புதிய ஒதுக்கப்பட்ட சமூகக் கூட்டத்தின் மீது அவதூற்றை அள்ளி வீசியிருக்கும் சிவகாமியின் கருத்துக்கள் சமூகவிரோதமானவை. பெண்கள் மீதான எந்த அக்கறையும் இன்றி தலித் முகமூடியோடு அவர்களை மேலும் சமூகத்திலிருந்து அன்னியப்படுத்தும் வகையில் சிவகாமி என்ற பெண் பொதுத் தளத்தில் பேசியிருப்பது வக்கிரத்தனமானது.

இவை எதிலும் அக்கறையற்ற புலிக் காவலர்களும், புலி எதிர்ப்பளர்களும் புலிகளில் இப்படியெல்லாம் நடந்ததா இல்லையா என்ற ஆய்வில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர். பேஸ்புக்கில் வழமைபோல இவர்கள் நடத்தும் ஒருவரி ஆய்வுகள் அவலத்திற்கு உள்ளான பெண்போராளிகளை இன்னும் அவமானப்படுத்துவாதாக அமைந்துள்ளது.

தவிர, பெண் போராளிகள் மீதான இந்த அவதூறை அரசியல்ரீதியாகக் கையாளத் துணிவற்ற தமிழ் ஈழத்தை சினிமா போன்று கற்பனை செய்து வைத்திருக்கும் ‘தமிழ் உணர்வாளர்கள்’ சிவகாமி மீது அவர் பெண்போராளிகள் மீது மேற்கொண்ட அருவருப்பான தாக்குதல்களுக்கு எந்த வகையிலும் குறைவின்றி பாலியல் தாக்குதலை ஆரம்பித்துவிட்டனர். இதை அறிந்து புல்லரித்துப் போன, இதுவரை இலங்கை அரச படைகளால் அவலத்திற்கு உள்ளாக்கப்படும் போராளிகள் குறித்துப் பேசியிராத புலி எதிர்ப்புக் கும்பல்கள் சிவகாமியைப் பாதுகாப்பதற்காக மட்டும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

சமூகத்தின் மீது எந்த அக்கறையுமற்ற இந்த அடையாளக் கும்பல்கள் அரசியல் வெளியிலிருந்து அகற்றப்படும் வரை சிவகாமிகளும் சீமான்களும் வாழ்வாங்கு வாழ்வார்கள்.

Exit mobile version