01.05.2009
மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்ஷ,
ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு – 03
மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கட்கு,
வன்னியில் எஞ்சியுள்ள இடம் பெயர்ந்தோரை காப்பாற்றுங்கள்
இலங்கை ஓர் தேசமாக தனது நாணயத்தைக் இழக்காது காப்பாற்றக் கூடிய வகையில் தங்களில் உடன் நடவடிக்கைக்காக நான் கவலையடையும் சில விடயங்களை முன்வைக்க விரும்புகிறேன். நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் தங்கள் நடவடிக்கைகளுக்கு எனது உயிருக்கு பெரும் அச்சுறுததல் இருந்தும் கூட எனது முழு ஒத்துழைப்பை தங்களுக்கு நல்கி தங்களை தப்பாக என்றும் நான் வழி நடத்தவில்லை. நான் ஆதாரமற்று கேள்விப்படுவனவற்றையோ, அல்லது பிறர் கூறும் அனைத்தையுமோ முற்று முழுதாக நம்புகிறவன் அல்ல.
இன்றும் வன்னியில் அகப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஒன்றரை இலட்சத்துக்கு மேல் இருக்கின்றனர் என்று நம்பகமான செய்தி கிடைத்திருக்கின்ற போதும் நிச்சயமாக ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இருக்கின்றனர் என்பதை நான் நம்புகின்றேன். முன்பு ஒரு சந்தர்பத்தில் எனது எண்ணிக்கை சரியானதென நிரூபணமானதை தாங்கள் மறந்திருக்கமாட்டீர்கள். துரதிஷ்டவசமாக விமானத்தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ள போதிலும் கடந்த மூன்று நாட்கள் தொடர்ந்து செல், ஆட்டிலறி தாக்குதல்கள் தொடர்கின்றன. அவற்றை உடன் நிறுத்தி அப்பாவி பொது மக்களை காப்பாற்றுங்கள்.
நான் சுட்டிக்காட்ட விரும்பும் ஒரு விடயம் யாதெனில் யுத்த நடவடிக்கைகள் பல இடம்பெயர்ந்தோரை கடும் பாதிப்புக்குள்ளாக்கும் அதேவேளையில் நலன்புரி நிலையங்களுக்கு தப்பி வந்துள்ளவர்களை பெரும் பயத்துக்கும் பீதிக்கும் உள்ளாக்குவதோடு அவர்களின் உறவுகள் பலர் இன்னும் வன்னியில் இருப்பதால் அவர்களுக்கு பெரும் பாதிப்புக்களையும் ஏற்படுத்தும். ஓவ்வொரு உயிரும் பெறுமதிமிக்கதால் அப்பாவி மக்களின் உயிர்களை என்ன விலை கொடுத்தேனும் பாதுகாக்க வேண்டிய பாரிய கடமை தங்களுக்குண்டு. நான் முன்பு தங்களுக்கு எழுதியது போல சில விடயங்கள் வெளியுலகுக்கு தெரியவரும் போது நம் நாடு சர்வதேச சமூகத்தால் பெரும் கண்டனத்துக்குள்ளாகும்.
வன்னியில் பெரும் உணவுத் தட்டுப்பாடு மக்கள் பட்டினியால் வாடுமளவுக்கு ஏற்பட்டுள்ளது. சித்திரை மாதம் 2ம் திகதி 1100 மெற்றிக் தொன் உணவு அங்கே அனுப்பப்பட்டதன் பின் 28ம், 29ம் திகதிகளில் தினம் 30 மெற்றிக் தொன் உணவே சென்றுள்ளது. இந்த இரு நாட்களிலும் அவர்களுக்கு தினம் கிடைத்துள்ள சீனி 1000 கிலோ கிறாம் மட்டுமே. ஆகவே தயது செய்து உடன் தேவைப்படும் உணவு, மருந்து வகைகளை அனுப்பி வைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இக் கடைசி நேரத்திலும் கூட நான் கூறும் ஆலோசனை தங்களுக்கு ஏற்புடையதாயின் அதை அமுல்ப்படுத்த முயற்சியுங்கள். எனது ஆலோசனை யாதெனில் அரசுக்கு ஏற்புடையதான ஓர் சர்வதேச அமைப்பை வன்னிக்கு அனுப்பி மக்களை விடுவிக்குமாறும், ஆயுதங்களுடன் சரணடைபவர்களுக்கு பொது மன்னிப்பு கொடுப்பதாகவும் கூறி அனுப்பி வையுங்கள். இதற்குத் தேவையான இருவார காலக்கெடுவும் கொடுக்கலாம். பொது மக்களை வெளியில் கொண்டுவர அத்தகையதோர் ஏற்பாடு செய்யத் தவறின் முடிவில் நாட்டின் நற்பெயரை நாசம் செய்யும் ஓர் பாரிய அனர்த்தம் தேசிய ரீதியில் ஏற்படவும் கூடும்
நன்றி
வீ. ஆனந்தசங்கரி
தலைவர் – த.வி.கூ