Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு : போராட்டம் ஆரம்பம்

மத்திய அரசு சில்லரை வணிகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் இந்தியா முழுவதும் பல கோடி சிறு வியாபாரிகள் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
மேற்குநாடுகளில் தமது பகற்கொள்ளையால் பெரும் அழிவை ஏற்படுத்திய பல்தேசிய நிறுவனங்கள் இப்போது வறிய நாடுகளைக் குறிவைக்கின்றன.
தொழில் வளர்ச்சியடைந்திருந்த நாடுகளின் சீரழிவை வேகப்படுத்திய அதே பல் தேசிய நிறுவனங்கள் இந்தியா போன்ற நாடுகளைச் சூறையாடி வருகின்றன. நிறுவன மயமான சில்லரை வர்த்தகத்தை 60 களில் மேற்கு நாடுகளில் அறிமுகப்படுத்திய பின்னர் 80 ஆம் ஆண்டுக்கு இடையில் சிறிய மற்றும் நடுத்தர விவசாயம் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது.
ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் இருப்பவர்களுக்கே மத்திய அரசின் இந்த முடிவு பிடிக்கவில்லை. என்றாலும் பலவீனத்தை சீர்படுத்தி, பொருளாதாரத்தை மேம்படுத்த இதை விட்டால் தனக்கு வேறுவழி தெரிய வில்லை என்று கூறிய பிரதமர் மன்மோகன்சிங் அன்னிய முதலீடு அனுமதியை வாபஸ் பெற இயலாது என்று அறிவித்தார்.

இது சிறு வியாபாரிகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கள் வாழ்வாதாரத்தை மத்திய அரசே அழித்து விடும் போல் இருக்கிறதே என்று கவலைக்குள்ளாகி இருக்கிறார்கள்.

மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க நாடெங்கும் உள்ள வியாபார அமைப்புகள் இன்று (வியாழக்கிழமை) கடை அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தன.
தமிழ்நாட்டில் 25 லட்சத் துக்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் உள்ளனர். அவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் இன்று தங்கள் கடைகளை அடைத்து எதிர்ப்பை தெரிவித்தனர். சென்னையில் பெரிய துணிக் கடைகள், நகைக்கடைகளும் மூடப்பட்டிருந்தன. கோயம்பேடு மார்க்கெட் செயல்படாததால் வெறிச் சோடியது. கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டதால் சென்னையில் உள்ள சிறு, சிறு காய்கறிகள் மார்க்கெட்டுக்களும் மூடப்பட்டன. இறைச்சி கடைகள் இயங்க வில்லை.

தமிழ்நாட்டில் வியாபாரிகள் நடத்தும் கடையடைப்புப் போராட்டத்துக்கு ம.தி.மு.க., பா.ம.க., இடது சாரிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், தொழிற் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. வங்கி ஊழியர்கள் சம்மேளனமும், வியாபாரிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அது போல காப்பீடு கழக ஊழியர்களும் இன்றைய கடையடைப்புக்கு ஆதரவாக உள்ளனர். அவர்கள் எல்.ஐ.சி. கட்டிட வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் கோயம்பேடு மார்க்கெட், தி.நகர் ரங்கநாதன் தெரு, ரிச்சி தெரு, பாரிமுனை பர்மா பஜார் கடைகள் முழுமையாக மூடப்பட்டிருந்தன. இதனால் இந்த இடங்கள் மக்கள் நடமாட்ட மின்றி வெறிச்சோடின. திருவொற்றியூர்,தண்டையார்பேட்டை,ராயபுரம், புரசைவாக்கம், அண்ணா நகர், வடபழனி, சிந்தாதிரிப் பேட்டை, மயிலாப்பூர், அடையார், பெசன்ட்நகர், திருவான்மியூர் பகுதிகளில் கடையடைப்பு வெற்றிகரமாக இருந்தன.

சென்னையில் இன்று பெரிய ஓட்டல்கள் மட்டுமே திறந்திருந்தன. சென்னை புறநகர் பகுதிகளில் ஓட்டல்களும் மூடப்பட்டிருந்தன. மருந்து கடைகள் உள்ளிட்ட சில அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் கடையடைப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அன்னிய முதலீட்டை திரும்பப் பெறக்கோரி சென்னையில் இன்று வியாபாரிகள் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தி வருகிறார்கள்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் அண்ணாசாலை மின்சார வாரிய தலைமை அலுவலகம் பின்புற சாலையில் காயிதேமில்லத் மணி மண்டபம் அருகே உண்ணா விரதப் போராட்டம் நடந்தது. வணிகர் சங்கங்களின் பேரவைத்தலைவர் த.வெள்ளையன் தலைமையில் நடந்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னிட்டு சென்னையில் சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் வியாபாரிகள் நடத்தும் ஒரு நாள் கடையடைப்பு மூலம் அரசுக்கு ரூ.40 கோடிக்கும் மேல் வரி வருமான இழப்பு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது.

Exit mobile version