சிலி நாட்டு நேரப்படி அதிகாலை 3.34 மணிக்கு இந்த பயங்கர நிலநடுக்கம் தாக்கியுள்ளது. சிலி நாட்டுத் தலைநகர் சாண்டியாகோவிற்குப் பிறகு அந்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரான கான்செப்சியானில் இருந்து 115 கி.மீ. தூரத்தில் கடற்பகுதியில் மையங்கொண்டு இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 8.8 புள்ளிகளாக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் சிலி நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை கிடைத்த தகவலின்படி, 53 பேர் உயிரிழந்துள்ளனர். நிலநடுக்கத்தால் உருவான ஆழிப் பேரலை (சுனாமி) 9 அடி உயரத்திற்குக் கிளம்பி சிலி நாட்டைத் தாக்கியதாக பசுபிக் பெருங்கடலிலுள்ள சுனாமி எச்சரிக்கை மையம் கூறியுள்ளது.
ஆனால், ஆழிப்பேரலை 40 மீட்டர் உயரத்திற்கு எழும்பி தாக்கியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று புவியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பூகம்பம் ஏற்பட்ட இடத்திலிருந்து நேர் கிழக்காக சிலியின் கடலோரம் அமைந்துள்ள மாலே எனும் சிறு நகரத்தில் என்ன நிகழ்ந்தது என்பதோ அல்லது 2 இலட்சம் பேர் வாழும் கான்செப்சியானில் ஏற்பட்டுள்ள அழிவு குறித்தோ இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.