தமிழ் மக்கள் தோற்கடிக்கப்பட்டு பல்லாயிரம் மக்களைக் கொன்றொழித்து பேரினவாத இலங்கை அரசு வெற்றிக் கழிப்பில் மிதந்து கொண்டிருக்கிறது. இலங்கைத் தீவு முழுக்க பௌத்த மேலாதிக்க பாசிசம் தலை விரித்தானத் துவங்குகின்றது. தமிழ் மக்களின் பாரம்பரீய வதிவிடங்களான வடக்குக் கிழக்கில் மக்களை குடியமர்த்தாமல் அவர்களின் நிலங்களை அபகரிக்கும் சிங்கள அரசு. மக்களை இராணுவ முகாம்களுக்கு மத்தியில் வாழ நிர்பந்திக்கிற நிலையில் பௌத்த பிக்குகளின் சிறுபான்மை மக்களுக்கு எதிரான போக்கு அதிகரித்துச் செல்கிறது. சிலாபம் முன்னோஸ்வரம் கோவிலில் வருடா வருடம் காளிக்குப் பலி கொடுத்து வழிபாடு நடத்துவது தமிழ் மக்களின் வழக்கம். இந்நிலையில் பௌத்த பிக்குகள் இந்த பலி நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ‘’இந்தப் பூஜை வழிபாடுகளளை தடுத்து நிறுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால், சத்தியாக் கிரக போராட்டம் நடத்தப்படும் என தேசிய சங்க சம்மேளனத்தின் புத்தளம் மாவட்ட பிரதம அமைப்பாளர் பாண்டிருப்புவே வினீத தேரர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் காவல்துறையும் இந்த வழிபாட்டிற்கு தடை விதிக்கும் என்று தெரிகிறது. தமிழர்களின் சிறு தெய்வ வழிபாட்டில் பலி கொடுப்பாது அசைவ உணவுகளை சாமிக்குப் படைப்பது, என்று பல்வேறு வகைப்பட்டது. பாரம்பரீயமான இந்த வழிபாட்டு நம்பிக்கைகளை தீவில் நிலவும் பௌத்த பாசிசம் தீர்மானிக்கும் சக்திகளாக இருப்பது ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.