09.08.2008.
பாகிஸ்தானுக்குள் தற்கொலைப் படையைச் சேர்ந்த சிறுமிகள் மனித வெடிகுண்டாக தாக்குதலில் ஈடுபடுவார்களென தலிபான் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் பழங்குடி இன மக்கள் வசிக்கும் பகுதியில் புனிதபோராளிகளுக்கு எதிரான நடவடிக்கையை அரசாங்கம் நிறுத்தாவிட்டால் தற்கொலைப் படையைச் சேர்ந்த சிறுமிகள் மனித வெடிகுண்டாக மாறி தாக்குதல் நடத்துவார்கள் என்று தலிபான் தலைவர் எச்சரித்தார்.
பாகிஸ்தானின் தலிபான் இயக்கத்துக்கு டெக்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் என்று பெயர். இதன் செய்தி தொடர்பாளர் மவுலவி ஒமர் தெரிவிக்கையில்;
ஆப்கானிஸ்தானில் செயல்பட்டுவரும் அமெரிக்க இராணுவத்தின் இராணுவ ஹெலிகொப்டர்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதை தவிர்ப்பதற்காக ஆப்கானிஸ்தான் எல்லை நெடுக நவீன விமான எதிர்ப்பு ஏவுகணைகளை அமைத்து இருக்கிறோம்.
அரசாங்கத்தின் அமைதி முயற்சிக்கு தலிபான் ஆதரவு அளித்தது. ஆனால், மத்திய ஆட்சியும், மாநில அரசும் தாங்கள் அளித்த உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்தத் தவறிவிட்டன. மத்திய ஆட்சி, ஜனாதிபதி முஷாரப்பின் கொள்கைகளைத் தான் பின்பற்றி வருகிறது. அமெரிக்காவின் செயல்திட்டங்களைத் தான் இந்த ஆட்சி நிறைவேற்ற முயற்சி செய்து வருகின்றது.
பழங்குடி இன மக்கள் வசிக்கும் பகுதியில் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், நாடு முழுவதும் எங்களின் சிறுவர்களும், சிறுமிகளும் பெரிய அளவில் தற்கொலைத் தாக்குதல் நடத்துவார்கள். கராச்சியில் உள்ள வர்த்தக பகுதியிலும் அவர்களின் தாக்குதல் இருக்கும்.
10 முதல் 20 வயதுக்குட்பட்ட எங்களின் சிறுவர்களும், சிறுமிகளும் தற்கொலைத் தாக்குதல் நடத்தத் தயாராக இருக்கிறார்கள். அரசு அலுவலகங்களை குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்துவார்களெனத் தெரிவித்தார்.
இதற்கிடையில் கராச்சி நகரில் தலிபான் இயக்கம் வேர் விடத் தொடங்கியுள்ளது. இதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்று முத்தாஹிதா குவாமி இயக்கம் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது. இதை ஒடுக்கத் தவறினால், அது கராச்சி நகரின் வர்த்தகம் மற்றும் தொழில் வளர்ச்சியை பாதிக்கும் என்று அந்த இயக்கம் எச்சரித்தும் உள்ளது.