Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிறிலங்க அரசுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் :அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா

krishnaஇலங்கை தமிழர்கள் குறித்து மத்திய அரசு மாநிலங்களவையில் தாக்கல் செய்த அறிக்கைக்குப் பதிலளித்துப் பேசிய பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், அஇஅதிமுக ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் அரசின் மீதான தங்களின் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான போருக்குப் பின் இந்திய எடுத்த நிலைப்பாட்டால், சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டதாக அவர்கள் குறைகூறினர்.

இலங்கையின் வடக்குப்பகுதியில் தற்போதைய நிலைமை குறித்து அரசின் அறிக்கைக்குப் பதிலளித்துப் பேசிய பாஜக மூத்த தலைவர் எம். வெங்கையா நாயுடு, தமிழர்களின் நெருக்கடியான நிலைக்கு மத்திய அரசின் பதில் நடவடிக்கையால் தாங்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்ததாகக் கூறினார்.

அண்டை நாட்டின் இறையாண்மைக்கு பாஜக உறுதிபூண்டுள்ள அதே நேரத்தில், விடுதலைப்புலிகளுக்காக எவ்வித இரக்கமும் தெரிவிக்கவில்லை என்றும் நாயுடு கூறினார்.

விடுதலைப்புலிகள் அழிந்து விட்டார்கள். பிரச்சினைக்கு தீர்வு வந்து விட்டது என யாராவது கருதுவார்களானால், அது வருந்தத்தக்க தவறாகும் என்று கூறிய வெங்கையா நாயுடு, சாதாரணமாக போரில் வெல்லலாம். ஆனால் அமைதி இழக்கப்படும் என்றார்.

இப்பிரச்சினையில் அரசியல்ரீதியில் தீர்வு காணப்படா விட்டால் மீண்டும் பிரச்சினை உருவெடுக்கும் என்றார் வெங்கையா நாயுடு.

போரினால் இடம்பெயர்ந்து பின் வன்னி முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த ஈழத் தமிழர்கள் 3 இலட்சம் பேரும், போருக்கு முன்னர் அவர்கள் எங்கு வாழ்ந்தனரோ அதே இடத்தில் மீண்டும் குடியமர்த்தப்படுவதை உறுதி செய்வோம் என்று இந்திய அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.

முன்னதாக அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா மாநிலங்களவையில் தாக்கல் செய்த அறிக்கையில், ஈழத் தமிழர்களின் நிலை குறித்தும், அவர்களின் மறுவாழ்வு தொடர்பாக சிறிலங்க அரசுடன் இணைந்து இந்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

“போரினால் உள்நாட்டில் இடம் பெயர்ந்த மக்கள் அவர்கள் வாழ்ந்த இடங்களிலேயே மீண்டும் குடியமர்த்தப்படுவதை உறுதி செய்ய சிறிலங்க அரசுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்” என்று கூறிய அமைச்சர் கிருஷ்ணா, அந்த 3 இலட்சம் தமிழர்களுக்கும் மனிதாபிமான உதவிகள் அனைத்தும் உடனடியாகக் கிடைக்கவும், அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீள் குடியமர்த்தவும் உடனடிக் கவனம் செலுத்தப்படுகிறது என்றார்.

Exit mobile version