Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிறிலங்கா அரசும், அதன் இராணுவமும் திட்டமிட்ட இனப் படுகொலையை நடத்தி முடித்துள்ளன:பேராசிரியர் பாய்ல்.

 

 இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா  அரசும், அதன் இராணுவமும் திட்டமிட்ட இனப் படுகொலையை நடத்தி முடித்துள்ளன என்று அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலை சட்டக் கல்லூரியின் சர்வதேச சட்டங்கள் துறைப் பேராசிரியர் பிரான்சிஸ் பாய்ல் கூறினார்.
சென்னையில் பன்னாட்டுத் தமிழர் நடுவம் இன்று ‘இலங்தை தமிழர் புனர்வாழ்வு’ என்ற தலைப்பில் நடத்திய ஒரு நாள் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய பேராசிரியர் பாய்ல், “தமிழர்களுக்கு எதிராக நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதலின் வாயிலாகவும், அவர்களை பட்டினிப் போட்டு கொல்வதன் மூலமும், நோயை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியும், அளவிற்கு அதிகமான மக்களை முகாம்களில் முடக்கி வைத்து அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை போதுமான அளவிற்கு அளிக்காமலும் ஒரு திட்டமிட்ட இனப் படுகொலையை சிறிலங்கா  அரசு நடத்தியுள்ளது” என்று கூறினார்.
சிறிலங்கா  அரசு தனது முப்படைகளையும் கொண்டு நடத்திய படுகொலை, ஐ.நா. உறுப்பு நாடுகள் அனைத்தும் ஏற்றுக் கொண்ட 1948ஆம் ஆண்டின் இனப் படுகொலைக்கு எதிரான உடன்படிக்கை விதி 2இன் கீழ் திட்டமிட்ட இனப் படுகொலையே என்றும், இதன் அடிப்படையில் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் அந்நாட்டிற்கு எதிராக வழக்குத் தொடர முடியும் என்றும் பாய்ல் கூறினார்.
போஸ்னியாவின் சிறிபிரீகாவில் செர்பிய படைகள் நடத்திய தாக்குதலில் 8,000 அல்பேனிய இனத்தவர்கள் கொல்லப்பட்டனர். அதனை ஐ.நா.வும் மேற்கத்திய நாடுகளும் இனப் படுகொலை என்று ஒப்புக் கொண்டன. அதனைப் போன்று 6 மடங்கு அப்பாவித் தமிழர்களை கடந்த ஜனவரியில் இருந்து 5 மாதத்தில் கொன்று குவித்துள்ளது சிறிலங்கா  அரசு. ஆனால் அதனை ஐ.நா.வோ அல்லது மேற்கத்திய நாடுகளோ இனப் படுகொலை என்று கூறாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார் பேராசிரியர் பாய்ல்.

சிறிலங்கா  அரசு தமிழர்களுக்கு எதிராக நடத்திவரும் இனப் படுகொலை தொடர்வதையே முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த 13,000 பேருக்கு மேல் காணாமல் போயிருப்பது காட்டுகிறது என்று கூறிய பாய்ல், இது மானுடத்திற்கு எதிரான குற்றமாகும் என்று கூறினார்.

சற்றேறக்குறைய 3 இலட்சம் பேரை அடிப்படைத் தேவைகள் அளிக்காமல் முகாம்களில் அடைத்து வைத்திருப்பது அவர்களையும் அழித்துவிட வேண்டும் என்ற திட்டத்தில்தான் என்றும் பாய்ல் கூறினார்.

 

Exit mobile version