Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிறிலங்காவில் செய்திருந்த அதே தவறினை ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் லிபியாவில் செய்யாமல் தவிர்த்துக் கொள்ளவேண்டும்! : தணிகாசலம் தயாபரன்

கடந்த 2009 ஆம் ஆண்டு சிறிலங்காவில் ஈழத்தமிழ்ப் பொதுமக்களைக் காப்பாற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையானது தவறியதைப் போன்று, மீண்டும் அது ஒரு தடவை அப்பாவிப் பொதுமக்களைக் காப்பாற்றுவதற்கு லிபியாவிலும் தவறக் கூடாது என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது ஐ.நாடு; சபையிடம் அவசர வேண்டுகோள் ஒன்றினை விடுக்கின்றது. சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதப்படுகொலைகளின் போது 60,000 வரையிலான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சமயம், ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையின் ‘மூடிய கதவுகளின்’ உள்ளே நடைபெற்றிருந்த கூட்டங்கள் அனைத்தினாலும், சிறிலங்காவில் நடைபெற்றுக் கொண்டிருந்த மனிதப்படுகொலைகளை தடுத்து நிறுத்த முடியவில்லை.

ஐ.நா.சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையகம் கூட ஈழத்தமிழர்களுக்கு எதிரான மனிதப்படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு எந்தவிதமான ஆக்கபூர்வமான முயற்சிகளையும் எடுக்கத் தவறியதோடு மட்டுமல்லாமல், அந்த மனிதப்படுகொலைகளை மேற்கொண்டிருந்த சிறிலங்காவின் பேரினவாத அரசாங்கத்திற்கு தன்னுடைய ஆசீர்வாதங்களையும் வழங்கியிருந்தது.; ஈழத்தமிழர்களைக் கொல்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்தை அனுமதித்திருந்தது போன்று, ஐ.நா.சபையானது லிபியாவிலும் பொதுமக்களைக் கொல்வதற்கு லிபிய அரசாங்கத்தை இனிமேலும் அனுமதிக்கக்கூடாது. சிறிலங்காவில் இனப்படுகொலைக்கும், போர்க்குற்றங்களுக்கும் காரணமான அரச தலைவர்களை நீதியின் முன், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதன் மூலம், தங்கள் நாட்டு சொந்த மக்களையே கொன்று குவித்துக் கொண்டிருக்கும் லிபிய நாட்டு அரச தலைவர்களுக்கும் ஐ.நா. பாதுகாப்பு சபையானது உடனடியாக ஒரு எச்சரிக்கை செய்தியை அனுப்பி வைக்கவேண்டும்.

ஈழத்தமிழர்களை இனப்படுகொலையிலிருந்து காப்பாற்றுவதற்கும், இப்பாரிய மனிதத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்துள்ள சிறிலங்காவின் அரச தலைவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கும் சர்வதேச சமூகத்தினர் இன்றுவரையில் தவறியிருப்பதும், இந்த விடயங்களில் சர்வதேச சமூகத்தினரின் இயலாமையைக் காட்டுவது மட்டுமல்லாமல்; இன்று சர்வதேச எங்;கினும் லிபியாவின் அரச தலைவர்களைப் போன்று, இறைமையின் பெயரால் மனிதத்திற்கு எதிராகப் பாரிய குற்றங்களை இழைப்பவர்களுக்கு மிகப்பெரிய துணிச்சலையும், அளவற்ற உற்சாகத்தினையும் கொடுத்திருக்கின்றது.

எனவே சிறிலங்காவில் போர்க்குற்றங்களுக்குக் காரணமானவர்களை தாமதமின்றி, உடனடியாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்து அநீதிகள் இழைக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்குவதன் மூலம், ஐ.நா. சபையானது லிபிய அரச தலைவர்களைப் போன்று மனிதத்திற்கு எதிராகப் பாரிய குற்றங்கள் இழைப்பவர்கள் எவராயினும் அவர்கள் இனிமேலும் நீதியின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்பதனை இத்தகைய கொடுங்கோலர்களுக்கு தெட்டத் தெளிவாக நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் அவசர வேண்டுகோள் ஒன்றினையும் விடுக்கின்றது.

சிறிலங்காவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தின் போது, 60,000 வரையிலான ஈழத்தமிழ்ப் பொதுமக்கள் அரச பயங்கரவாதப் படைகளினால் படுகொலை செய்யப்பட்டனர். சர்வதேச போர் விதிகளை மீறும் வகையில் மருத்துவமனைகளும், பாடசாலைகளும் அரச படைகளின் விமான மற்றும் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகின. போரின் மத்தியில் அகப்பட்டுக் கொண்ட பொதுமக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் விநியோகங்களில் பல்வேறு தடைகளை அரச படையினர் ஏற்படுத்தியிருந்தனர்.

மருந்தின்மையாலும், பட்டினியாலும் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதாக ஐ.நா. சபை அறிவித்திருந்தது. போரில் காயப்பட்டிருந்த பொதுமக்களுக்கு அவசியமான மருத்துவ உதவிகளைச் செய்வதற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினருக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி மறுத்திருந்த காரணத்தினாலும், பொதுமக்களில் பலர் இறக்க வேண்டி நேரிட்டது. போரிலிருந்து தப்பியோடிய பொதுமக்களில் பலர் சிறிலங்காவின் அரச படைகளினால் உருவாக்கப்பட்டிருந்த இரகசிய மற்றும் திறந்த வெளி முகாம்களில் சிறை வைக்கப்பட்டு, இவர்களில் பலர் அரச பயங்கரவாதப் படைகளினால் பின்னர் சித்திரவதைகள் செய்யப்பட்டு கொல்லப்பட்டனர், பெண்களில் பலர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

மே 26 ஆம் நாள் 2009 ஆண்டு அன்று, ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர்களில் ஒருவரான திருமதி. மக்டலீனா செபுல்வேதா அவர்கள், ‘சிறிலங்காவின் அரசாங்கமானது பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி, கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக, போரிலிருந்து தப்பியோடிய ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் உட்பட 300,000 இற்கு மேற்பட்ட பொதுமக்களை தனது முகாம்களில் தொடர்ந்தும் அடைத்து வைத்திருக்கின்றது. போதிய உணவின்மையாலும், பட்டினியாலும் பொதுமக்களில் பலர் இந்த முகாம்களில் இறந்து கொண்டிருக்கின்றனர். இவற்றை நாம் வன்மையாக எதிர்க்கின்றோம்.’ என அறிவித்திருந்தார்;;;.

சிறிலங்கா அரசாங்கம் ஆனது இதனை தொடர்ந்து மறுத்து வந்த போதிலும், அரச பயங்கரவாதப் படைகளானது பொதுமக்கள் செறிந்து இருந்த இடங்களிலும், பொதுமக்களின் பாதுக்காப்பிற்கென அரசாங்கத்தினாலேயே அறிவிக்கப்பட்டிருந்த ‘பாதுகாப்பு-வலயங்களினுள்ளும்’ தொடர்ந்தும் மோட்டார் குண்டுத் தாக்குதல்களை அவ்விடங்களின் மீது மேற்கொண்டிருந்தார்கள்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது, சிறிலங்காவில் உரிமைகள் மறுக்கப்பட்டு அரச பயங்கரவாத அடக்குமுறைகளுக்கு தினசரி முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்ற ஈழத்தமிழினத்தின் அடிப்படை மனித உரிமைகளுக்காக உலக அரங்கினில் குரல் எழுப்புவதற்காகப், போரினால் புலம் பெயர்ந்து வாழுகின்ற ஈழத்தமிழர்களினால் ஜனநாயக விழுமியங்களுக்கு அமைய, உருவாக்கப்பட்டுள்ள ஓர் சர்வதேச அமைப்பு ஆகும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள், 12 புலம்பெயர்நாடுகளில் வாழும் ஈழத்தமிழ் மக்களால் ஜனநாயக வழிமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆவர்.

இந்த மக்கள் பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு அரசியல்-சாசனத்தையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் அடிப்படையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது பிரதமரையும், அரசவைத்தலைவரையும், பத்துப் பேர் அடங்கிய அமைச்சரவையையும் கொண்டுள்ளது.
அன்று சிறிலங்காவில் நடந்தது, இன்று லிபியாவில் நடந்து கொண்டிருப்பதைப் போன்று, இறைமையின் பெயரால் உலக எங்கினும் மனிதப்படுகொலைகளையும், அரச பயங்கரவாதங்களையும் நடாத்திக் கொண்டிருக்கும் கொடுங்கோலர்களிடம் மேலும் பொறுமை காட்டாது, இனிமேலாகினும் சர்வதேச சமூகமானது மனிதத்திற்கு எதிராகப் பாரிய குற்றங்களைப் புரிந்து கொண்டிருக்கின்ற இந்தக் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிறுத்தி தண்டிப்பதன் மூலம் மனித சமூகத்தை போர்களிலிருந்தும், கொடுமைகளிலிருந்தும், பேரழிவிலிருந்தும் காப்பாற்ற முன்வர வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது ஜனநாயகத்தை நேசித்து மதித்துப் போற்றுகின்ற அனைத்து உலகத் தலைவர்களையும், மனித உரிமை ஆர்வலர்களையும், உலக மாந்தரையும் வேண்டிக் கொள்கின்றது.

மேலதிகத் தொடர்புகளுக்கு, தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்:

திரு. தணிகாசலம் தயாபரன்,

அரசியல் மற்றும் வெளிநாட்டு அமைச்சர்,                               
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்,
மின்னஞ்சல் : t.thayaparan@tgte.org

http://www.TGTE.ORG

Exit mobile version