Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிறியளவு நிலப்பரப்புக்குள்ளேயே விடுதலைப்புலிகள்; அழித்தொழிக்க ஒரு வருடம் கூட தேவையில்லை:சரத் பொன்சேகா.

03.01.2009.

விடுதலைப் புலிகள் தற்போது வடக்கில் தொப்பிகல வனப் பிரதேசத்தையும் விட சிறிய நிலப் பரப்பில் மட்டுமே நிலை கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கும் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா, எஞ்சியிருக்கும் 1700 இற்கும் 1900 இற்கும் இடைப்பட்ட தொகையிலான புலிகளை முற்றாக அழித்தொழிக்க இன்னும் ஒருவருடம் கூட தேவைப்படாதென்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கிளிநொச்சி படையினர் வசமானதையடுத்து நேற்று வெள்ளிக் கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற படையினரின் வெற்றியை மக்களுக்கு அறிவிப்பதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போதே லெப்.ஜெனரல் பொன்சேகா இவ்வாறு கூறினார்.

வரைபடங்கள் சகிதம் இங்கு விளக்கமளித்து உரையாற்றிய அவர் மேலும் பேசுகையில்;

“2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எமது நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. நடவடிக்கைகளை ஆரம்பித்து ஒரு வருடத்திற்குள் கிழக்கு மாகாணத்தை மீட்க முடிந்தது. இதையடுத்து 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் வடக்கை இலக்காகக் கொண்ட எமது நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

எனினும், 57 ஆவது படையணியினர் 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதமே வடக்கை நோக்கிய நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டிருந்தனர். வவுனியாவிலிருந்தே இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக முதலாவது சிறப்புப் படையணியினரும் பின்னர் 59 ஆவது படையணியினர், 3 ஆவது, 4 ஆவது, 2 ஆவது சிறப்பு படையணியினரும் இந்த நடவடிக்கை களில் ஈடுபடுத்தப்பட்டனர்.

2007 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது இடைவிடாது ஓய்வில்லாமல் மோற்கொள்ளப்பட்டதொன்றாகும். இது பல கஷ்டங்களுக்கு மத்தியில் பெற்ற வெற்றியாகும்.

சுழல்காற்று போன்ற இயற்கை அனர்த்தங்களுக்கும் புலிகளின் பல்வேறுபட்ட எதிர்ப்பு நட வடிக்கைகளுக்கும் மத்தியிலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் எந்தப் பிரதேசத்திலும் சூழ்நிலைகளிலும் தங்களால் திறம்பட செயற்பட முடியுமென்பதை படையினர் புலிகளுக்கு நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

எமது இந்த நடவடிக்கைகளின் போது படையினரில் பாரிய உயிரிழப்புகளை சந்திக்க நேர்ந்தது. படையினரில் பலரும் அங்கவீனர்களாக்கப்பட்டுள்ளனர். மேலும், பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகள் சமாதான காலத்தில் விடுதலைப் புலிகள் பலமடைந்ததன் காரணமாகவே இந்த நிலைமைக்கு எமக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது. இதன் பிரதிபலனாக உயிரிழப்புகளுக்கும் காயங்களுக்கும் முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது.

இதேநேரம், பூநகரி பிரதேசத்தைப் பிடித்ததன் மூலம் 23 வருடங்களுக்கு பின்னர் தெற்கிலிருந்து வடக்கிற்கான பாதையொன்றை திறக்க முடிந்தது. பூநகரியை பிடித்து ஒரு மாத காலப்பகுதிக்குள் பரந்தன், கிளிநொச்சி பிரதேசத்தை நோக்கி நாம் கவனம் செலுத்த ஆரம்பித்தோம். கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி இரவு முதலாவது சிறப்புப் படையணி பரந்தன் பிரதேசத்தை பிடித்தது. இதையடுத்து வியாழக்கிழமை இரவு கிளிநொச்சி நகரம் படையினரால் முற்றாகக் கைப்பற்றப்பட்டது.

எமது இந்த நடவடிக்கையையடுத்து புலிகள் கிழக்காக தப்பியோடியுள்ளனர். “ஏ9′ பாதையூடாக வடக்கு நோக்கி நகர்ந்து ஆனையிறவிலிருந்து 2 கிலோ மீற்றர் தூரத்தில் நாம் தற்போது இருக்கிறோம். இதேபோல் கிழக்குப் பக்கமாக நாம் நகர்ந்து “ஏ9′ பாதையிலிருந்து ஒன்றரை கிலோ மீற்றர் தூரம் கிழக்காக முன்னேறியுள்ளோம். பரந்தன் நகரத்தின் முழு கட்டுப்பாடும் படையினர்வசம் கொண்டு வரப்பட்டுள்ளது.

வெலிஓயா பக்கமாக நகர்ந்த படையினர் முல்லைத்தீவிலுள்ள புலிகளின் விமான ஓடுதளத்திற்கு 3 கிலோ மீற்றர் தூரத்தில் நெருங்கியுள்ளனர். இந்த பிரதேசங்களில் புலிகள் கடுமையாக பின்வாங்கி வருகின்றனர்.

1998 ஆம் ஆண்டின் பின்னர் அதாவது 10 ஆண்டுகளின் பின்னர் நாம் கிளிநொச்சியை மீண்டும் கைப்பற்றியுள்ளோம். 1999 ஆம் ஆண்டு பரந்தன் மற்றும் ஆனையிறவு பிரதேசங்கள் படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகிச் சென்றதையடுத்து தற்போது மீண்டும் (பரந்தன்) அப்பிரதேசம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேநேரம், இப்பிரதேசத்தைச் சேர்ந்த பொது மக்களை புலிகள் கிழக்குப் பக்கமாக பலவந்தமாக அழைத்துச் சென்றுள்ளனர்.

எமது நடவடிக்கைகளின் பலனாக விடுதலைப் புலிகளுக்கு தற்போது நாம் கிழக்கில் இறுதிப் போராட்டத்தை மேற்கொண்ட தொப்பிகல வனப் பிரதேசத்தின் அளவை யொத்ததொரு நிலப் பரப்பு மட்டுமே எஞ்சியிருக்கிறது. உண்மையில் பார்க்கப் போனால் இது தொப்பிகல பிரதேசத்தை விடவும் குறைவான பரப்புடைய பிரதேசமே புலிகளிடம் எஞ்சியிருக்கிறது.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 1,500இற்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். எமக்கு கிடைக்கும் புலனாய்வுத் தகவல்களுக்கு அமைய 1,700இற்கும் 1,900இற்கும் இடைப்பட்ட தொகையிலான புலிகள் மட்டுமே எஞ்சியிருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

எனவே, இந்த வருட இறுதிக்குள் கட்டாயம் பயங்கரவாதிகளை முற்றாக அழித்தொழித்து விட முடியுமென நான் நம்புகின்றேன். எவ்வாறிருப்பினும் இதற்கு ஒரு வருட காலம் தேவைப்படாது. எனவே, குறுகிய காலத்திற்குள் எஞ்சியிருக்கும் விடுதலைப் புலிகளையும் முற்றாக அழித்தொழிப்போம்’ என்றார்.

Exit mobile version