Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிறப்பாக நடைபெற்ற இளைய அப்துல்லாவின் இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு : பரணீதரன்

இளைய அப்துல்லா என்று பரவலாக அறியப்பட்ட கவிஞர், எழுத்தாளர், ஊடகவியலாளர் திரு. எம்.என்.எம். அனஸ் அவர்களின் இரண்டு கட்டுரைத் தொகுப்புகளின் வெளியீட்டு நிகழ்வு கிழக்கு லண்டனின் ஈஸ்ட்ஹாம் நகரில், ட்ரினிட்டி சமூக நிலையத்தில் 30 – 07 – 2011 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் ஆரம்பித்து இரவு 10 மணிவரை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. ‘அண்ணை நான் தற்கொலை செய்யப்போகிறேன்’ என்ற கட்டுரைத் தொகுப்பு உயிர்மெய் (தமிழ்நாடு) வெளியீடாகவும், ‘கடவுளின் நிலம்’ என்ற கட்டுரைத் தொகுப்பு விஸ்வசேது (டென்மார்க்) வெளியீடாகவும் வந்துள்ளன. இந்த நூல்கள் ஒருசில மாதங்களுக்கு முன்னரே பலருடைய கைகளுக்கும் கிடைத்துவிட்டன என்றபோதிலும் ஒரு உத்தியோகபூர்வ வெளியீட்டு நிகழ்வு என்றவகையில் இந்த நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது. எனக்குத் தெரிந்தவரையிலும், நிகழ்வுக்குவந்த பலர் கூறிய வகையிலும் – நீண்ட காலத்தின்பின்னர் லண்டனில் ஒரு நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு கிட்டத்தட்ட நூறு பேர்வரையில் வருகைதந்தது இந்த நூல் வெளியீட்டுக்காகத்தான் இருக்கும்.

சாதாரணமாக தமிழ் பேசும் சமூகங்களால் லண்டனில் நடாத்தப்படும் ஒரு நூல் அறிமுக நிகழ்வுக்கு அல்லது நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு வருபவர்களின் எண்ணிக்கை ஐம்பதைத் தாண்டாது என்பதுதான் லண்டன் மாநகரின் கடந்தகால அனுபவங்கள். அந்தவகையில் திரு. அனஸ் அவர்களின் இந்த நூல் வெளியீட்டு நிகழ்வு மிகவும் வெற்றிகரமாக அமைந்தது என்று துணிந்து கூறலாம். இலக்கிய ஆர்வலர்கள், வாசிப்பில் நாட்டம் உள்ளவர்கள், அரசியல் செய்யட்பாட்டாளர்கள், ஊடக செயற்பாட்டாளர்கள், கலைத் துறையைச் சேர்ந்தவர்கள் என்று பலர் பங்குபற்றினார்கள். அதிலும் வேறுபட்ட அரசியல், கொள்கை நிலைப்பாடுகளை உடைய பலரும் அங்கு வந்திருந்தனர் என்பது முக்கியமான விடயம்.

பொதுவாக இப்படியான நிகழ்வுகளுக்கு வேறுபட்ட அரசியல் நிலைப்பாடுகள், கொள்கைகளைக் கொண்டவர்கள் ஒன்றாக கலந்துகொள்வது மிகவும் குறைவு. இதிலிருந்து வெளிப்படும், திரு.அனஸ் அவர்களின் தனது தனிப்பட்ட அரசியல், கொள்கை விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நட்புகளைப் பேணும் தன்மை மிகவும் பாராட்டத்தக்கது. வரவேற்கத் தக்கது. ஏனையவர்களும் பின்பற்றவேண்டிய விடயம்.

நல்லனவற்றைச் சொல்லும்போது குறைபாடுகளையும் சொல்லியே ஆகவேண்டும். வழமையாக தமிழர்களுக்கே சொந்தமான, தமிழர்களின் நிகழ்வுகளிலேயே பெரும்பாலும் இடம்பெறும் நேரம் தவறுகின்றமை இங்கும் இடம்பெற்றது. நூல் வெளியீட்டு அழைப்பிதழில் நிகழ்வு தொடங்கும் நேரம் மாலை 5 மணி என்று இருந்தபோதும் மாலை 6 மணிக்கும் மேலேதான் நிகழ்வு ஆரம்பமானது. நாழிகை ஆசிரியர் திரு.மாலி அவர்கள் நிகழ்வினை மிகவும் சிறப்பாக தலைமை தாங்கி நடாத்தினார். திரு. மாலி அவர்களின் தலைமை உரையைத் தொடர்ந்து, இலக்கிய ஆய்வாளர் திருமதி.மாதவி சிவசீலன், நாடகர் திரு.சாம் பிரதீபன் ஆகியோரின் உரை நிகழ்ந்தது.

அதனைத் தொடர்ந்து ‘அண்ணை நான் தற்கொலை செய்யப்போகிறேன்’ மற்றும் ‘கடவுளின் நிலம்’ ஆகிய இரு நூல்களினதும் வெளியீடு நடைபெற்றது. அண்ணை நான் தற்கொலை செய்யப்போகிறேன் நூலின் முதற் பிரதியை எழுத்தாளர் தம்பு சிவா வழங்க, சைவமுன்னேற்றச் சங்கத்தின் நிறுவுனர் திரு.வி.ஆர்.ராமநாதன் அவர்கள் பெற்றுக்கொண்டார். கடவுளின் நிலம் நூலின் முதற் பிரதியை அந்நூலின் பதிப்பாளர் திரு.ஜீவகுமாரன் வழங்க, எழுத்தாளர் திரு.உதயணன் அவர்கள் பெற்றுக் கொண்டார். முதற் பிரதிகள் வழங்கப்பட்டதை தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, ஆய்வாளர் திரு.சூ.யோ.பற்றிமாகரன், முன்னாள் கிழக்குப் பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி பேராசிரியர் திரு.பாலசுகுமார் , எழுத்தாளர் திரு.தம்பு சிவா, பதிப்பாளர் – எழுத்தாளர் திரு.ஜீவகுமாரன், ஈழவர் திரைக்கலை மன்ற நிறுவுனர் பாரிஸ்டர் திரு.ஜோசப் ஆகியோரின் சிறப்பான உரைகள் இடம்பெற்றன. ‘அண்ணை நான் தற்கொலை செய்யப்போகிறேன்’ என்ற நூலினை விடவும் ‘கடவுளின் நிலம்’ நூலே அனேகமானவர்களை கவர்ந்துள்ளது என்பதை உரையாற்றிய பலரது கருத்துகளிலும் இருந்து உணர முடிந்தது. ‘அண்ணை நான் தற்கொலை செய்யப்போகிறேன்’ என்ற பெயர் நீளமானதாகவும் நெருடலாகவும் உள்ளதாக ஒருசிலர் அபிப்பிராயப்பட்டனர். முன்னர் ஒருமுறை அனஸ் உடன் உரையாடும்போது ‘கடவுளின் நிலம்’ என்ற நூலுக்கு ‘விபச்சாரத்தின் நிறம் சிவப்பு’ என்றே தலைப்பு வைத்திருந்ததாகவும் இறுதி நேரத்தில் அதனை மாற்றி ‘கடவுளின் நிலம்’ என்று வைத்ததாகவும் சொல்லியிருந்தார்.

நல்லவேளை அவர் தலையங்கத்தை மாற்றிவிட்டார் என்று நினைத்துக்கொண்டேன். ‘அண்ணை நான் தற்கொலை செய்யப்போகிறேன்’ என்பதே நெருடலாக இருக்கும்போது ‘விபச்சாரத்தின் நிறம் சிவப்பு’ என்று வைத்திருந்தால் நூல் வெளியீட்டுக்கு யாரும் வந்திருக்க மாட்டார்கள். இறுதியாக திரு.அனஸ் அவர்களின் நன்றி உரையோடு நிகழ்வு சிறப்பாக நிறைவடைந்தது. நிகழ்வு முடிவடைந்ததும் வருகைதந்த அனைவருக்கும் சிறந்த இரவு விருந்தும் வழங்கப்பட்டது இன்னும் சிறப்பு. இப்படியான நூல்கள் தொடர்ந்து வெளிவருவதும், நூல் வெளியீட்டு நிகழ்வுகள் நடைபெறுவதும், பலதரப்பட்ட பிரமுகர்கள் அவற்றில் கலந்து கொள்வதும் புலம்பெயர் தமிழ்பேசும் சமூகங்களுக்கு மிகவும் ஆரோக்கியமாக அமையும்.

Exit mobile version