Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிரேஷ்ட அமைச்சர்கள் உட்பட19 பேர் பொன்சேகாவை ஆதரிப்பர்!

ஆளுந்தரப்பிலிருந்து 19 பேர் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கத் தயாராகி வருவதாகவும் இவர்களில் சிரேஷ்ட அமைச்சர்கள் பலரும் உள்ளடங்கியிருப்பதாகவும் தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர அடுத்த வாரத்தில் எதிர்பாராத பலதிருப்பங்கள் அரசியலரங்கில் இடம்பெறவிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

நேற்று செவ்வாய்க்கிழமை ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் செயலகத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் பொது வேட்பாளரின் இணை ஊடகப் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இந்தத் தகவலை வெளியிட்டதோடு, இதன் ஆரம்ப நடவடிக்கையாக அரசின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான இ.தொ.கா.விலிருந்து இன்று புதன் கிழமை ஒரு பிரதியமைச்சரும் இ.தொ.கா.வின் முக்கியஸ்தர் ஒருவரும் இணையவிருப்பதாகவும் தெரிவித்தார்.

அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது; முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மகன் விமுக்தி அரசியலில் ஈடுபடத் தயாராகி வருகிறார் என்று சில ஊடகங்கள் ஊகம் தெரிவித்திருக்கின்றன. அதில் உண்மை எதுவும் கிடையாது. விமுக்தி அரசியலுக்கு வரமாட்டார். அவர் தொடர்ந்து லண்டனில் உயர் கல்வியைத் தொடர்வார்.

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உரிய நேரத்தில் தனது நிலைப்பாட்டை அறிவிப்பார். நாட்டில் நடப்பவற்றை அவர் உன்னிப்பாக அவதானித்து வருகின்றார். அவர் நேர்மையான வேட்பாளருக்கே ஆதரவளிப்பார். ஊடகவியலாளர்கள் அவசரப்படத் தேவையில்லை. அவர் சரியான நேரத்தில் சரியான முடிவை அறிவிப்பார்.

இதேவேளை, 2010 பிறக்கும் போது புதுவருடத்தில் பெரும் அரசியல் திருப்பங்கள் ஏற்படலாம். அரசிலிருந்து 19 பேர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளனர். இவர்களில் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரும் உள்ளடங்கியுள்ளனர். ஜனவரி முதல் வாரத்தில் இடம்பெறும் ஜெனரல் பொன்சேகாவின் தேர்தல் பிரசார மேடைகளில் பலர் தோன்றலாம். அவர்கள் யார் யாரென்பதை இப்போது கூறமாட்டேன். இரண்டொரு நாட்கள் பொறுத்திருங்கள். நீங்கள் ஆச்சரியப்படும் வகையில் மாற்றங்கள் ஏற்படலாம்.

இதற்கு முன்னோடியாக இன்று புதன்கிழமை இ.தொ.கா.விலிருந்து ஒரு பிரதியமைச்சரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மகிந்த ராஜபக்ஷவுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டு அரசிலிருந்து விலகி ஜெனரல் பொன்சேகாவை ஆதரிக்கவுள்ளனர்.

அரசிலுள்ள பலர் ராஜபக்ஷ குடும்பத்தின் சர்வாதிகாரப் போக்கால் அதிருப்தி கொண்ட நிலையிலிருக்கின்றனர். இவர்களில் சிரேஷ்ட அமைச்சர்கள் பலரும் அடங்குகின்றனர். ஜெனரல் பொன்சேகாவை ஆதரிப்பதென அவர்கள் ஏற்கனவே தீர்மானித்து விட்டனர். அடுத்த வார முற்பகுதியிலிருந்து அவர்கள் எமது மேடைகளில் தோன்றவிருக்கின்றனர். அரசிலிருந்து வெளியேறவிருப்போரின் பெயர்களை இப்போதைக்கு வெளியிட முடியாதுள்ளது. இன்னும் இரண்டொரு தினங்கள் பொறுமையுடன் இருங்கள். புத்தாண்டில் புதிய செய்தியைத் தருவோம் என மங்கள சமரவீர தெரிவித்தார்.

Exit mobile version