Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிரியா கலவரக்கும்பலுக்கு உதவ ஒபாமா ரகசிய உத்தரவு – அம்பலம்

சிரியாவில் உள்நாட்டு கலவரத்தை தூண்டிவிட்டு அந்நாட்டில் உள்ள அரசுக்கு எதிரான ஆயுதக்குழுவினருக்கு அனைத்து வகைகளிலும் உதவி செய்திட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஓபாமா ரகசிய உத்தரவிட்டிருப்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது. ராய்ட்டஸ், ஏபிசி உள்ளிட்ட பல்வேறு உலக செய்தி நிறுவனங்கள் வெள்ளை மாளிகையில் இருந்து வெளிவந்திருக்கும் தகவல் என்ற அடிப்படையில் செய்திகளை வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் இதுவரை ரகசியமாக செய்த பல்வேறு சதிவேலைகள் வெளிப்படையாக தெரியவந்திருக்கிறது.

அரபு நாடுகளில் ஒன்றான சிரியாவில் மதச்சார்பற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும் அமெரிக்காவின் எடுபிடிபோல் செயல்பட அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது. இதையடுத்து சிரியா அதிபர் பசார் அல் அசாத்தை அதிபர் பதவியில் இருந்து அகற்ற வேண்டும். தனக்கு சாதகமான அதிபரை அதிகாரத்தில் அமர்த்த வேண் டும்என அமெரிக்கா தொடர்ந்து முயன்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிரியா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது. ஆனால் இந்த தீர்மானத்திற்கு எதிராக சீனாவும், ரஷ்யாவும் தங்களது ரத்து அதிகாரத்தை ( வீட்டோ பவர்) பயன்படுத்தின. இதனால் தீர்மானம் தோல்வியுற்றது.

இதையடுத்து தனது முதல் முயற்சி தோல்வியடைந்த உடன் ஓபாமா இந்தாண்டின் துவக்கத்தில் சிரியாவில் அரசிற்கு எதிராக செயல்படும் ஆயுதக்குழுக்களுக்கு ஆயுத உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்திட வேண்டும். அதன் மூலம் சிரியாவில் அரசு படைகளுக்கும், ஆயுதக்குழுக்களுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் போர் ஏற்பட்டு அமைதியற்ற சூழலை உருவாக்க வேண்டும் என சிஐஏ உள்ளிட்ட அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

இதற்கு உதவிடும் வகையில் துருக்கி, சவுதிஅரேபியா, கத்தார் உள்ளிட்ட நாடுகளையும் இணைத்து சிரிய எல்லை பகுதிகளில் தகவல் பரிமாற்ற மையத்தோடு இணைந்த ரகசிய உத்தரவு மையத்தை அமைத்தது. அங்கிருந்து அரசு எதிர்ப்பு ஆயுதக் குழுவினருக்கு ராணுவபயிற்சி அளிப்பது, ஆயுதங்களை கொடுத்தனுப்புவது, சிரிய அரசு படைகள் குறித்த தகவல்களை பரிமாறுவது உள்ளிட்ட வேலைகள் நடைபெற்றிருக்கிறது.

இதே போல் அமெரிக்க விமானப்படை, ராணுவம் மற்றும் உளவு பிரிவு இணைந்து சிரியாவில் கலவரத்தை இயக்கும் நரம்பு மண்டலமாக தெற்கு துருக்கியில் உள்ள அடானா நகரில் ஒரு மையத்தை அமைத்து செயல்படுத்தி வருகிறது. இதற்கிடையே அமெரிக்கா, சிரிய அரசுக்கு எதிரான ஆயுத குழுவினருக்கு 250 லட்சம் அமெரிக்க டாலர்மதிப்பினலான பேரழிவை ஏற்படுத்தாத ஆயுதங்கள் வழங்கப்படும என புதனன்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறது. இப்படி சிரியாவில் ரத்தக்களரி ஏற்பட சதிசெய்து வருவதோடு, சிரியா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என அமெரிக்கா இதுவரை மூன்று முறை ஐ.நா.சபையில் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version