மத்திய அரசு சனிக்கிழமை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அவசரகால வழக்காக விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி பி. சதாசிவம், “மனுவுக்கு சிபிஐ, மத்திய உள்துறை, குவாஹாட்டி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த மனுதாரர் நவேந்திர குமார் ஆகியோருக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதுவரை குவாஹாட்டி உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டார்.
சதாசிவம் வீட்டில் விசாரணை: முன்னதாக, மத்தியப் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை சார்பில் மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி பி. சதாசிவத்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து அட்டர்னி ஜெனரல் குலாம் இ. வாகனவதி வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி, சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு தனது இல்லத்தில் விசாரணை நடத்தப்படும் என்று கூறினார்.
அட்டர்னி ஜெனரல் வாதம்: அதன்படி, தலைமை நீதிபதி பி. சதாசிவம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டது. அப்போது ஆஜரான
அட்டர்னி ஜெனரல் குலாம் இ. வாகனவதி முன்வைத்த வாதம்:
“சிபிஐ சட்டப்பூர்வ அந்தஸ்து பெற்ற புலனாய்வு அமைப்பே அல்ல என்று மிகவும் சர்ச்சைக்குரிய தீர்ப்பை குவாஹாட்டி உயர் நீதிமன்றம் அளித்துள்ளது. “தில்லி சிறப்பு போலீஸ் அமைப்புச் சட்டம் 1946′ அடிப்படையில் சிபிஐ என்ற காவல் அமைப்பை உருவாக்க 1963, ஏப்ரல் 1-ஆம் தேதி மத்திய அரசு நிறைவேற்றிய தீர்மானத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தெரிவிக்கவில்லை. எனவே, அத்தீர்மானம் சட்டவிரோதமானது என குவாஹாட்டி உயர் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.
ஆனால், தில்லி சிறப்பு போலீஸ் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் பல்வேறு வழக்குகளில் சிபிஐக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. அதை குவாஹாட்டி உயர் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை.
அரசுக்கு அதிகாரம் உண்டு: அதே தில்லி சிறப்பு போலீஸ் அமைப்புச் சட்டத்தின் கீழ் புதிய சிறப்புக் காவல் அமைப்பை உருவாக்க மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதை உயர் நீதிமன்றம் பரிசீலிக்கவில்லை. உச்ச நீதிமன்றம், அந்த அதிகாரத்தை பல வழக்குகளில் உறுதிப்படுத்தியுள்ளது.
உயர் நீதிமன்றத் தீர்ப்பால் சுமார் ஒன்பதாயிரம் நீதிமன்றத் தீர்ப்புகள், நீதிமன்ற விசாரணையில் உள்ள சுமார் 1,000 வழக்குகள் பாதிக்கப்படும். சிபிஐயில் சுமார் 6,000 பேர் பணியாற்றி வருகின்றனர். ஒட்டுமொத்த சிபிஐ காவல் கட்டமைப்பே குலைந்துவிடும் நிலை ஏற்படும். இத் தீர்ப்பைப் பயன்படுத்தி வேறு சில வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டவர்கள், குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆதாயம் தேடக் கூடும்.
நரேந்திர குமார் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த குவாஹாட்டி உயர் நீதிமன்றம் இத் தீர்ப்பை வழங்கியுள்ளது. அவரது மனுவில் எதிர் மனுதாரர்களாக மத்திய உள்துறை, சிபிஐ ஆகியவற்றை மட்டும் குறிப்பிட்டிருந்தார்.
விளக்கம் கேட்காமல் தீர்ப்பு: சிபிஐ என்பது மத்திய உள்துறையின் கீழ் செயல்படும் காவல் அமைப்பு அல்ல. அதன் நிர்வாக கட்டுப்பாடு மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் கீழ் உள்ளது. அத் துறையின் விளக்கத்தைக் கேட்காமல் குவாஹாட்டி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்’ என்று வாகனவதி கூறினார்.
விசாரணை ஒத்திவைப்பு: அதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி பி. சதாசிவம், “மத்திய பணியாளர் நலன் பயிற்சித் துறை மனுவுக்கு நவேந்திர குமார், சிபிஐ, மத்திய உள்துறை ஆகியோர் இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு அடுத்த விசாரணையை டிசம்பர் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
பின்னணி: அசாம் மாநிலத்தில் மத்திய பொதுத் துû ற நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் நவேந்திர குமார். அவர் மீது குற்றவியல் தண்டனைச் சட்டப்படி சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது. அதைத் தள்ளுபடி செய்யும்படி அவர் குவாஹாட்டி உயர் நீதிமன்றத்தில் 2007-இல் வழக்கு தொடர்ந்தார்.
1946-இல் தில்லி சிறப்புக் காவல் சட்டத்துக்கு உள்பட்டு 1963, ஏப்ரல் 1-ஆம் தேதி சிபிஐ அமைப்பை உருவாக்கும் தீர்மானத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. அத் தீர்மானத்துக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து கிடையாது. எனவே, சிபிஐ சட்டவிரோத அமைப்பு என்று நவேந்திர குமார் குறிப்பிட்டிருந்தார்.
அதை விசாரித்த உயர் நீதிமன்றம், “தில்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சிபிஐ, சட்டப்பூர்வ காவல் அமைப்பே கிடையாது. அது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கவில்லை. எனவே, அந்த அமைப்பு நவேந்திர குமார் மீது பதிவு செய்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது. அவர் மீதான வழக்கை சிபிஐ விசாரிக்கவும் தடை வதிக்கப்படுகிறது’ என்று கடந்த வியாழக்கிழமை வழங்கிய தீர்ப்பில் தெரிவித்திருந்தது.