ஜ.நா சபையின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் படி ஜ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைக்கு சாட்சியங்கள் வழங்குமாறு கோரப்பட்டுள்ள நிலையில் அதற்கு சாட்சியங்களை வழங்க பாதிக்கப்பட்டவர்கள் பலரும் ஆர்வமாக உள்ளனர். குறிப்பாக யுத்தத்தில் நோரடியாக பாதிக்கப்பட்டு கொடூர இனவழிப்பு யுத்தத்தின் நேரடி சாட்சிகளாக தற்போது தமிழர் தாயகத்தில் வாழ்ந்து வருகின்றனர். அச்சாட்சிகளில் பலரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கோரிக்கைக்கு இணங்க குறித்த விசாரனைகளுக்கு சாட்சியம் வழங்க தயாராகவும் ஆர்வமாகவும் உள்ள நிலையில் சாட்சியம் அளிப்பவர்களை கைது செய்யும் ஸ்ரீலங்கா அரசின் நடவடிக்கையானது ஐ.நா சபையின் விசாரனையை குழப்பும் மோமான செயற்பாடாகும். அத்துடன் தான் மேற்கொண்ட குற்றங்களை மூடிமறைக்கும் செயற்பாடுமாகும்.
தமிழர் தாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நேரடிச் சாட்சியங்கள் பதிவு செய்யப்படும் போதே ஜ.நா மனித உரிமை பேரவையின் விசாரணைகள் காத்திரமானவையாகவும், நடந்த உண்மைகளையும் தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் வெளி உலகிற்கு கொண்டுவரக் கூடியதாகவும் அமையும். எனவே தாயகத்திலிருந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்கு சாட்சியங்கள் அனுப்பப்படுவதனையும், சாட்சியங்கள் வழங்குபவர்களின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்த வேண்டிய கடமை ஐ.நா சபைக்கு உண்டு. இலங்கை அரசினால் செய்யப்படுகின்ற இத்தகைய கைதுகள் இலங்கை அரசின் மீது ஐ.நா கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டடாய தேவையை மீளவும் வலியுறுத்தி நிற்கின்றது.
நாம் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக பல தடவை தமிழர் தாயகத்தில் வாழ்கின்ற நேரடிச் சாட்சியங்களை முழுமையாக பதிவு செய்வதற்கும் அச்சாட்சியங்களை பாதுகாப்பதற்கும் ஐ.நா சபை ஓர் பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று கோரிவருகின்றோம்.
அந்த வகையில் இலங்கை அரசின் இத்தகைய மிலேச்சத்தனமான சட்டவிரோத கைதுகளை தடுத்து நிறுத்தும் வகையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சாட்சியங்களை பாதுகாக்க தமிழர் தாயகத்தில் ஐ.நா கண்காணிப்பின் கீழ் ஓர் இடைக்கால நிர்வக சபையை உடனடியாக உருவாக்கப்பட வேண்டும் என்றும் நாம் கோருகின்றோம்.
செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்