Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சித்திரவதை நாடு இலங்கைக்கு காணாமல் போவோர் நாடுகளில் உலகில் இரண்டாமிடம்

சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் 47வது அமர்வு நேற்று ஜெனிவாவில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மனிதஉரிமைகளைப் பின்பற்றுவதில் சிறிலங்காவுக்கு உள்ள பொறுப்புத் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டன.
கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு மேலதிகமான தகவல்களை வழங்குவதில்லை என்று குழுவின் பல உறுப்பினர்கள் சிறிலங்கா அரசு மீது குற்றம்சாட்டினர்.
சிறிலங்கா படைகளின் இரகசிய தடுப்பு முகாம்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க சுதந்திரமான விசாரணைகள் அவசியம் என்று சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் உதவித் தலைவர் பெலிஸ் கேர் இந்த அமர்வில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிறிலங்கா இராணுவம் மற்றும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை ஆயுதக்குழுக்களால் இயக்கப்படும் இரகசியத் தடுப்பு முகாம்கள், சித்திரவதைகள் மற்றும் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் இரகசியமாக இடம்பெறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும், அதுவே அங்கு நடந்துள்ளது என்றும் அவர் காட்டமாக குற்றம்சாட்டியுள்ளார்.
சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் ஏழு இரகசிய தடுப்புமுகாம்கள் இருப்பதாக அனைத்துலக மன்னிப்புச்சபை அறிக்கை ஒன்றை கையளித்துள்ளதாகவும், அவற்றில் 5 முகாம்கள் வவுனியாவிலும், இரண்டு முகாம்கள் முல்லைத்தீவிலும் இருப்பதாகவும் பெலிஸ் கேர் குறிப்பிட்டுள்ளார்.
பூந்தோட்டம் மகா வித்தியாலயம், 211 பிரிகேட் தலைமையகம், வெளிக்குளம் மகாவித்தியாலயம், புளொட் துணை ஆயுதக்குழு நிலையம், தர்மபுரம் ஆகிய 5 முகாம்கள் வவுனியாவிலும், மேலும் 2 முகாம்கள் முல்லைத்தீவிலும் செயற்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கைவிடப்பட்ட 5 கட்ட்டங்கள், வீடுகளைக் கொண்ட தர்மபுரம் இரகசியத்தடுப்பு முகாமில் ஆண்களும் பெண்களுமாக 700 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் 80 பேர் விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைவர்கள் என்றும், புலிகளின் ஆதரவாளர்களான 300 பொதுமக்களும் அதில் அடங்குவதாகவும் பெலிஸ் கேர் கூறியுள்ளார்.
காணாமற்போதல்கள் தொடர்பான ஐ.நா பணிக்குழு சிறிலங்காவை உலகில் அதிகளவில் காணாமற்போகும் சம்பவங்கள் இடம்பெறும் நாடுகளில் இரண்டாவது நாடாக பட்டியலிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“சிறிலங்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் மீது சுதந்திரமான மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுவதில்லை.
பாரிய மனித உரிமை மீறல்கள் சிறிலங்காவில் இடம்பெற்றதாக எனக்கு பல முறைப்பாடுகள் வந்துள்ளன.
இந்த முறைப்பாடுகளில் பலவந்தமாக காணாமல் போனது, காவல்துறையால் சித்திரவதை செய்யப்பட்டது, பாலியல் தாக்குதல் நடைபெற்றது, மனிதஉரிமை குறித்த வழக்குகளில் முன்னிலையாகும் சட்டவாளர்கள் மிரட்டப்படுவது, சிறையில் நடைபெறும் மரணங்கள் போன்றவை அடங்கும்.
சிறிலங்கா அரசு தான் அறிவித்தபடி தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் பெயர் விபரங்களை இன்னமும் வெளியிடவில்லை.
தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் பெயர் விபரங்கள் அரசிடம் இருப்பதாகவும், இதை அவர்களின் உறவினர்கள் பெறலாம் என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கடந்த ஜனவரி மாதம் கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரக அதிகாரிகளிடம் கூறியிருந்தது.
ஆனால் இதுபோன்ற விபரங்கள் இருப்பதாக கூறப்பட்டாலும், விபரங்களைப் பெற முடியவில்லை என்று அரசசார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.” என்றும் பெலிஸ் கேர் குறிப்பிட்டார்.
சித்திரவதை தொடர்பான ஐ.நா உடன்பாட்டில் சில அம்சங்களில் தனது நாடு கைச்சாத்திடவில்லை என்று, இந்த மாநாட்டில் சிறிலங்காவைப் பிரதிநிதித்துவம் செய்யும் குழுவின் தலைவரான, சிறிலங்கா அமைச்சரவையின் ஆலோசகரும், முன்னாள் சட்டமா அதிபருமான மொகான் பீரிஸ் சுட்டிக்காட்டினார்.
சிறிலங்கா பாதுகாப்புப் படைகளால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகளை தடுக்க சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சித்திரவதைகளை சகிக்கமுடியாது என்ற கொள்கையில சிறிலங்கா அரசாங்கம் ‘110 வீதம்‘ ஒப்புக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய அமர்வில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு சிறிலங்கா இன்று பதிலளிக்க வேண்டும் என்றும் பெலிஸ் கேர் கூறியுள்ளார்.

Exit mobile version