காணாமல் போனோர் கடத்தப்பட்டோரை இலங்கை அரச சித்திரவதைக் கூடங்களில் மனித வதைக்கு உள்படுத்தப்படுவோரை விடுதலை செய்யவேண்டும் என்று கோரி நூற்றுக்கணக்கான மக்கள் இன்று வவுனியாவில் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்திற்கு இடதுசாரி முன்னணி அழைப்புவிடுத்திருந்தது. காணாமல் போனோரின் படங்களைத் தாங்கியபடியும் இலங்கை அரசிற்கு எதிரான சுலோகங்களைத் தாங்கியவண்ணமும் மக்களின் அவலக் குரல்கள் கேட்கின்றன. இடதுசாரி முன்னணியைச் சார்ந்த சிங்கள தோழர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினர். மகிந்த ராஜபக்ச அரசு ஆயிரக்கணக்கானவர்களைச் சித்திரவதைக் கூடங்களில் கொன்றுபோட்டிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. இவ்வாறான போராட்டங்கள் இலங்கையில் அரசால் மூர்க்கத்தனமாக அடக்கப்படும் சூழலில் உலகளாவிய எதிர்ப்பும் அற்றுப்போன நிலையில் ராஜபக்ச அரசு சித்திரவதைகளையும் கொலைகளையும் சட்டமாக்கியுள்ளது. சர்வதேச அளவில் இதற்கான அழுத்தங்கள் வழங்கப்படும் வகையில் கைதிகளை விடுதலை செய்யக் கோரும் போராட்டம் ஒன்று நடத்தப்பட வேண்டும் என கருத்துத் தெரிவிக்கப்படுகிறது.