சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் இறுதி தீர்ப்பின் படி 2009 –ம் ஆண்டில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட சிதம்பரம் நடராசர் கோவிலை மீண்டும் தீட்சிதர்களின் வசமே ஒப்படைக்கும் வண்ணம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. 40 ஏக்கர் பரப்பளவுள்ள கோயிலும், சுமார் 2,700 ஏக்கர் நிலமும், பல கோடி மதிப்புள்ள நகைகளும் கோயிலின் அர்ச்சகர்களான தீட்சிதர்களின் கட்டுப்பாட்டுக்குப் போய்விட்டது. தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கோயிலை, தீட்சிதப் பார்ப்பனர்களின் தனிச்சொத்தாக்கியிருக்கிறது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.
பார்ப்பனியத்தின் தமிழின வெறுப்புக்கும், தீண்டாமைக்கும் வரலாற்றுச் சான்றாக இருப்பவர்கள் தீட்சிதர்கள். அன்று நால்வர் பாடிய தேவாரத்தை சிதம்பரம் கோயிலுக்குள் முடக்கி வைத்து அழிக்க முனைந்த தீட்சிதர்கள்தான் பத்தாண்டுகளுக்கு முன் திருவாசகம் பாடிய சிவனடியார் ஆறுமுகசாமியை சிற்றம்பல மேடையிலிருந்து அடித்து வீசினார்கள். அன்று நந்தனாரை எரித்துக் கொன்றது மட்டுமல்ல, 1935 -ம் ஆண்டுவரை நடராசர் கருவறைக்கு எதிரே இருந்த நந்தனார் சிலையை அகற்றியவர்களும் அவர்கள்தான். நந்தனார் நுழைந்த தெற்குவாயிலை மறித்து தீண்டாமைச் சுவர் எழுப்பிவைத்துக் கொண்டு, அதை நியாயப்படுத்துபவர்களும் தீண்டாமை வெறி பிடித்த தீட்சிதர்கள்தான்.
தீட்சிதர்கள் பக்தர்களை எப்படி நடத்தினார்கள் என்பது பக்தர்களுக்குத் தெரியும். தீட்சிதர்கள் எந்த சட்டத்தையும், எந்த பக்தரையும் மதித்ததில்லை. பக்தர்களிடம் பணம் பறிப்பது, சாமி நகைகளை களவாடியது, கள்ளக் கையெழுத்துப் போட்டு கோவில் சொத்தை விற்றது என்று தீட்சிதர்கள் செய்த அயோக்கியத்தனங்களைப் பற்றி சக தீட்சிதர்களே அரசுக்குப் புகார் கொடுத்ததன் விளைவாகத்தான் 1982-ல் எம்.ஜி.ஆர் அரசு நிர்வாக அதிகாரியை நியமித்தது. எம்.ஜி.ஆர் அரசு போட்ட ஆணையைத்தான் தற்போது ஜெயலலிதா அரசு குப்பையில் வீசியிருக்கிறது.
‘உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், தமிழக அரசு தனிச்சட்டமொன்று இயற்றி சிதம்பரம் கோயிலை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர முடியும். எல்லா பிரச்சினைகளுக்கும் சட்டமன்றத்தில் “வரலாற்று சிறப்பு மிக்க ஒருமனதான தீர்மானம்” இயற்றும் ஜெயலலிதா அரசு, இதற்கு ஒரு மசோதா கொண்டு வந்து ஒருமனதாக அதை ந்நிறைவேற்றி சட்டமாக்க முடியும். அவ்வாறு சட்டமியற்ற வேண்டும் என்பதற்காகப் போராடுவோம். அது மட்டுமல்ல, பார்ப்பன சாதிவெறி பிடித்த தீட்சிதர்கள், தமிழ் மக்கள் அனைவரையும் இழிவுபடுத்தும் வண்ணம் கோயிலின் தெற்கு வாயிலில் எழுப்பியிருக்கும் தீண்டாமைச் சுவரை அகற்ற வேண்டும். கோயிலில் இருந்து திருட்டுத்தனமாக அகற்றிய நந்தனார் சிலையை மீண்டும் நிறுவவேண்டும் என்பதற்காகவும் போராடுவோம்.’ என்று அறிவித்திருக்கிறார் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் சி.ராஜூ