Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

“சிங்கள பௌத்தர்கள்- பூர்விகக் குடிகள் யோசனைத் திட்டம்”:UNP ன் இனவாதம்?

  ஐக்கிய இலங்கைக்குள் பூர்விகக் குடிகளின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி நாட்டை அபிவிருத்தி செய்ய எதிர்க்கட்சிகளின் பொது இணக்கமொன்றை ஏற்படுத்திக் கொள்வது என்ற பெயரில் ஐக்கிய தேசியக் கட்சி இந்த வாரம் ஏனைய அரசியல் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்த தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.
சிங்கள பௌத்தர்கள் என்ற அடிப்படையிலேயே இந்தப் பூ ர்விகக் குடிகள் யோசனைத் திட்டம் அமைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

சமஸ்டி முறைமை பிரச்சினைக்குத் தீர்வாகது என அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி தமது கொள்கைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி இனவாதத் தோரணையில் செயற்பட ஆரம்பித்துள்ளதாக கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், குடியரசு என்ற தொனிப்பொருளின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவின் தலைமையிலான, ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் சபையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை கடந்த 15ம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான செயற்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் ‘ஐக்கிய இலங்கை –  பூர்விகக் குடிகள் யோசனை” தொடர்பாக ஏனைய அரசியல் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்காக கரு ஜயசூரிய தலைமையிலான குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் காமினி ஜயவிக்ரம பெரேரா, திஸ்ஸ அத்தநாயக்க, எஸ்.பீ. திஸாநாயக்க, ரவி கருணாநாயக்க, லக்ஸ்மன் கிரியெல்ல, கபீர் ஹசீம் மற்றும் லக்ஸ்மன் செனவிரத்ன ஆகியோரம் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.

இணக்கப்பாடொன்றைக் கட்டியெழுப்பப்படும் போது ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள மேற்கூறிய யோசனையை ஏனைய கட்சிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதியின் வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் ஒருவரே நிறுத்தப்பட வேண்டும் எனவும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளர் மாத்திரமல்லாது ஏனைய தேர்தல்களில் போட்டியிடும் போது அனைத்து வேட்பாளர்களும் யானைச் சின்னத்திலேயே கட்டாயமாக போட்டியிட வேண்டும் எனவும் சில நிபந்தனைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த இணைக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான சகல பரிந்துரைகளையும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் சபையே மேற்கொள்ள வேண்டும் எனவும் அதன் செயற்குழுவில் இந்தப் பரிந்துரைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும் ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கொள்கைகளை உருவாக்குவதற்காக அரசியல் சபையினால் உபகுழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என அண்மையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் யோசனையொன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version