இதேவேளை பல்கலைக்கழகத்தில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்காவிட்டால் அதனை மூடிவிடப்போவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸ்ஸநாயக்க அறிவித்துள்ளார். புலம் பெயர் நாடுகளில் தமிழீழம் பிடித்துவிடப்போவதாக கூறிவரும் புலி சார் அமைப்புக்கள், அங்குள்ள போராட்ட அமைப்புக்கள் மாணவர் போராட்டங்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்தபோதும் அவற்றைக் கண்டுகொள்ளவில்லை.
தெற்காசியாவில் பல்கலைக்கழகக் கல்வி முழுமையாக தனியார் மயப்படுத்தப்படாமலிருக்கும் ஒரெ நாடு இலங்கை. இலங்கையின் உயர்கல்வி தராதரம் மேற்குப் பலக்லைக்கழகங்களுக்கு இணையானதாகக் கருதப்படுகின்றது.
மகிந்த பாசிசம் உலகின் ஏகபோக அரசுகளோடும் ஐ,எம்,எப் போன்ற அவற்றின் பொருளாதாரக் கூறுகளோடும் இணைந்து சிங்கள பெருந்தேசியத்தின் பெயரால் சிறுபான்மைத் தேசிய இனங்களின் நிலப்பரப்புக்களைக் ஆக்கிரமித்து பல்தேசிய நிறுவனங்களுக்கு தாரைவார்த்துக்கொடுக்கிறது. கல்வி உட்பட வளங்களையும் அரச சேவைத்துறைகளையும் தனியார்மயப்படுத்தி வருகிறது. உயர்கல்வியின் ஒரு பகுதியையாவது தனியார் மயப்படுத்தவிடின் ஐ.எம்.எப் இடம் நியாயம் சொல்ல முடியாது என்று எஸ்.பி.திஸ்ஸநாயக்க தெரிவித்திருந்தார்.
யாழ்.பல்கலைக்கழகத்தை சிங்களப் பெருந்தேசிய வாதத்தின் பெயராலும் பௌத்ததின் பெயராலும் தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைகள் திரைமறைவில் நடைபெறுகின்றதா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
மாணவர்களின் விடுதலைக்காகவும், தனியார் மயப்படுத்தல்களுக்கு எதிராகவும் இலங்கை முழுவதும் உள்ள மாணவர்களின் போராட்டங்கள் அவசியமானவை.