
சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நடந்த கார்டிஃப் நகர மைதானத்தின் முன்பாக இலங்கைக்கு எதிரான போராட்டம் ஒன்று புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்பட்டுள்ளது.
மிகவும் அவசியமான இந்தப் போராட்டத்தை உலகம் முழுவதும் வாழும் மக்கள் மட்டுமல்ல இலங்கையிலுள்ள தமிழ் முஸ்லிம் மட்டுமல்ல சிங்கள் மக்களும் அவதானிக்க ஆரம்பித்துள்ளனர். வன்னிப் படுகொலைகளை மனிதாபிமான மீட்புப் போராட்டமாக மறைத்து சிங்களம் மட்டுமே பேசும் பெரும்பான்மையானவர்களை இலங்கை அரசும் அதன் ஊதுகுழல் ஊடகங்களும் கட்டுப்படுத்தி வைத்திருந்தன. இன்று ராஜபக்சவின் மனிதப்படுகொலைகளை சிங்கள மக்கள் சிறிதளவேனும் உணர ஆரம்பித்திருக்கும் நிலையில் ராஜபக்ச அரசு அவர்கள் மீதும் கோரமான ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் முழு சிங்கள மக்களையும் ராஜபக்ச பாசிஸ்டுக்களுக்கு மீண்டும் ஆதரவாக மாற்றும் கூட்டம் ஒன்று புலம்பெயர் நாடுகளில் உருவாகியுள்ளது. இவர்கள் இலங்கை அரசோடு நேரடியாகவோ மறை முகமாகவோ ஒத்துழைக்கிறார்கள் என்பது வெளிப்படை.
இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் உணர்ச்சி வயப்பட்டு சிங்கள இளைஞரைத் தாக்கியுள்ளார். பெரும் திரளாக மக்கள் கலந்துகொள்ளும் போராட்டங்களில் இவ்வாறான சம்பவங்கள் தவிர்க்க முடியாதவை ஆகிவிடுவது வழமை என்று கூட வைத்துக்கொள்ளலாம். தமிழ் இளைஞர் போலிசாரால் பின்னர் கைது செய்யப்பட்டர் என்பது மேலதிக செய்தி.
இங்கு முக்கிய செய்தி இதுவல்ல ராஜபக்ச பாசிசத்தின் நெருங்கிய நண்பர்கள் இந்த இளைஞனின் உணர்ச்சிவ்சப்பட்ட தாக்குதலை தமது பிழைப்பிற்காக எப்படிப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதுதான்.
அருவருப்பான பாலியல், சினிமாச் செய்திகள் மற்றும் பரபப்புச் செய்திகளை வெளியிட்டு புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ள இணையம் ஒன்று சிங்கள இளைஞரைத் தாக்கிக் காயப்படுத்திய ‘வீரத்தமிழர்’ ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அருவருப்பான இனவாதத்தை வாந்தியெடுத்துள்ளது. இவர்களுக்கு தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் வெற்றியை நோக்கி நகர்த்தப்பட வேண்டும் என்ற எந்த அக்கறையும் கிடையாது. தங்கள் பிழைப்பு நடந்தால் போதும் என்று எதை வேண்டுமானாலும் எழுதி மக்களை உணர்ச்சிவயப்படுத்துவார்கள். இவர்களின் பின்னணியில் செயற்படும் பிழைப்புவாதக் கும்பல்கள் பேரினவாத அரசின் நெருங்கிய நண்பர்கள்.
ஈழத்தமிழர்கள் வெறுப்புணர்வையும் வன்முறை உணர்வும் கொண்ட அருவருப்பான இனவாதிகளா இல்லை ஒடுக்குமுறைக்கு எதிராக சுய நிர்ணய உரிமை கோரிப் போராடும் வீரம் செறிந்த போராளிகளா ?