தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் என்பது வெறித்தனமான குறுகிய தேசியவாத எல்லைக்குள் முன்னெடுக்கப்படுவதற்கு தமிழரசுக் கட்சியும் அதன் புதிய ஒட்டப்பட்ட வடிவமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப்புமே பிரதான காரணிகள்.
தேசிய விடுதலை என்பது பிரிவினைக்கானதல்ல பிரிந்து செல்வதற்கான உரிமைக்கானது. தமிழ்ப் பேசும் மக்களின் பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டத்தை வெறிகொண்ட பிரிவினைக்கான போராட்டமாக மாற்றி ஆண்டபரம்பரை மீண்டும் ஆளும் என்ற கோசத்துடன் தேர்தலில் வாக்குப் பொறுக்கியவர்கள் தமிழரசுக் கட்சியினர். முள்ளிவாய்க்கால் வரை மட்டுமல்ல இன்றும் தொடரும் அழிவுகளுக்கு வித்திட்டவர்களும் அவர்களே.
தமிழீழக் கனவை இளைஞர்கள் மத்தியில் வெறித்தனமாக விதைத்து சிங்கள்வர்களின் தோலில் செருப்புத் தைப்போம் என அருவருப்பான வெறியூட்டிய தமிழரசுக் கட்சியின் ஆயுத வடிவமாகவே இயக்கங்கள் தோன்றின. 30 வருடங்களாக தவறாக நடத்தப்பட்ட போராட்டத்தின் ஊற்றுமூலம் தமிழரசுக் கட்சியே. இன்றும் புலம்பெயர் நாடுகளில் பிழைப்பிற்காகப் பயன்படுத்தப்படும் சுலோகங்கள் தமிழரசுக்கட்சியிடம் இருந்து கடன்வாங்கப்பட்டவையே.
இன்று பிரிந்து செல்லும் உரிமை என்பதை மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை என்பதைக்கூட கூறுவதற்கு அஞ்சும் ஏகாதிபத்தியங்களின் அடியாட்கள் இவர்கள். இலங்கை சிங்கள பாசிச அரசின் நீதிமன்றத்தில் தாம் உருவாக்கிய ஊழித் தீயில் கருக்கப்பட்டவர்களையெல்லாம் மறந்து பிரிந்து செல்லும் உரிமையக்கூட அடகுவைத்திருக்கிறார்கள்.
தமிழர்கள் தேசிய இனம் என்ற அடிப்படையில் பிரிந்து செல்லும் உரிமை கொண்டவர்கள். அவர்களுக்குப் பிரிந்து செல்லும் உரிமையை வழங்குவது இலங்கை அரசின் தவிர்க்கமுடியாத கடமை. அந்த உரிமை வழங்கப்பட்டால் தமிழர்கள் பிரிந்து செல்வதற்குப் பதிலாக இணைந்து வாழவே விரும்புவார்கள். தேசிய இன ஒடுக்குமுறை தொடர்ந்தால் பிரிந்து செல்வதைத் தீர்மானிப்பதும் அவர்களின் ஜனநாயக உரிமை. தமிழர்கள் பிரிந்து சென்று தனியரசு அமைக்க விரும்புகிறார்கள் அன்றி இணைந்து வாழ விரும்புகிறார்களா எனத் தீர்மானிப்பதற்கு தமிழரசுக் கட்சிக்கோ இலங்கை அரசிற்கோ எந்த உரிமையும் கிடையாது.
பிரிந்து செல்லும் உரிமையை வழங்க மறுக்கும் சிங்கள பாசிச அரசே பிரிவினையை ஊக்கப்படுத்துகிறது.
அடிப்படை உரிமையை வழங்கமறுக்கும் அரசின் நடவடிக்கை சரியானதே என்று சிங்கள மக்கள் மத்தியில் கூட நியாயப்படுத்தும் அளவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காட்டிக்கொடுப்பு அமைந்துள்ளது. அன்று சிங்களவனின் தோலில் செருப்புத் தைப்போம் என்று வாக்குக் கேட்டவர்கள் இன்று பாசிஸ்டுக்களின் செருப்பைத் தலையில் காவிச் செல்கின்றனர்.
இன்றுவரைக்கும் தமிழ்ப் பேசும் மக்களின் பிரிந்து செல்லும் உரிமையைக்காக குரலெழுப்ப எந்த அரசியல் தலைமையும் அற்ற வெற்றிடமாக்கப்பட்டுள்ள தமிழர்களின் அரசியல் தொடர்ச்சியான அழிவுகளுக்கே வழிகோலும்.