17.08.2008.
சிங்கள இனவாதம் காரணமாகவே நாட்டில் பயங்காரவம் தோன்றியுள்ளதாகக் கட்டிட நிர்மாண அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
குறுகிய அரசியல் லாபங்களை ஈட்டும் நோக்கில் அதிகாரப் பகிர்விற்குச் சிங்களக் கடும்போக்காளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். 13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்படுவதன் மூலம் படைவீரர்களது யுத்த முன்நகர்வு பலவீனப்படுத்தும் என்று ஜே.என்.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமய பிரசாரம் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இவ்வாறான பிரசாரங்கள் எந்தவிதமான அடிப்படையுமற்ற முட்டாள்தனமான பிரசாரங்களாகவே தாம் நோக்குவதாக அவர் தெரிவித்துள்ளார். சண்டே லீடர் ஆங்கில நாளேட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியின் போது அமைச்சர் சேனாரத்ன இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அரசியல் சாசனத்திற்கு அமைவாக செயற்படுவேன் உறுதிமொழி பூண்ட இவர்கள் இவ்வாறு அரசியல் சாசனத்தை விமர்சிப்பது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என அவர் தெரிவித்துள்ளார். 25 வருட காலமாக நீடித்துக் கொண்டிருக்கும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரக் கூடிய சாத்தியங்கள் இருந்த போதிலும், இனப்பிரச்சினைக்கு யுத்த வெற்றி தீர்வாக அமையாது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
1956ம் ஆண்டு முதல் தெற்கின் சிங்களத் தலைமைத்துவங்கள் தமிழர் பிரச்சினைகளைச் சரியான முறையில் அணுகவில்லை என்பதே யதார்த்தமான நிலையென அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கள இனவாதிகளின் பகிர்ந்து கொள்ளல் தொடர்பான புரிந்துணர்வின்மை காரணமாகப் பயங்கரவாதப் பிரச்சினை விசுவரூபமெடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.