Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

“சார்க்” மாநாடு: கடல், வான் கண்காணிப்பு முற்றாக இந்தியாவிடம்

இம் மாத இறுதியிலும் அடுத்த மாத முற்பகுதியிலும் கொழும்பில் ‘சார்க்’ உச்சி மாநாடு நடக்கும் சமயத்தில் தலைநகர் கொழும்பின் கடல், வான் கண்காணிப்பு நடவடிக்கைகள் முற்றாக இந்தியத் தரப்பின் பொறுப்பின் கீழ் முன்னெடுக்கப்படும். தரைப்பாதுகாப்பிற்கு மட்டுமே இலங்கை அரசுப் படைகள் தனித்து முன்னெடுக்கும்.
அதேசமயம், இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காகக் கொழும்பு வரும் இந்தியப் பிரதமருக்கும் ஏனைய மூத்த அதிகாரிகளுக்கும் உரிய பாதுகாப்பை வழங்குவதற்காக நூற்றுக்கும் குறைவான இந்தியக் கொமாண்டோ மெய்ப்பாதுகாவலர்களே இலங்கை வருவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.இந்தியத் தரப்பின் பாதுகாப்புக்குச் சுமார் மூவாயிரம் பேர் கொண்ட படையணி இந்தியாவிலிருந்து கொழும்பு வரப்போவதாக முன்னர் வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும் தெரிவிக்கபட்டது.

சார்க் சமயத்தில் தலைநகர் கொழும்பின் வான், கடல் கண்காணிப்பு நேரடியாக இந்தியப் பொறுப்பில் இருக்கும். இதற்காகக் கொழும்புக்கு வெளியே கடலில் இரண்டு பாரிய இந்தியக் கப்பல்கள் தரித்து நிற்கும்.

அவற்றிலிருந்து கண்காணிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படும். அச்சமயத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்தியத்தரப்பின் கவனத்துக்குக் கொண்டுவராமல் எந்த வான் பறப்பும், கடல் நகர்வும் முன்னெடுக்கப்பட முடியாமல் இலங்கை கெடுபிடியில் இருக்கும் எனத் தெரிவிக்கபட்டது.

இந்தியப் பிரதமர் மற்றும் அதிதிகளின் நலனுக்காக முழு ‘தாஜ் சமுத்திரா” ஹோட்டலையும் இந்தியத் தூதரகம் வாடகைக்கு அமர்த்தித் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும். இதற்கான பதிவுகள், ஒழுங்குகள் ஏற்கனவே செய்யப்பட்டுவிட்டன.

எத்தகைய நெருக்கடியையும் எதிர் கொள்ளத் தயாரான நிலையில் இந்தியத் தரப்பின் இரண்டு உலங்கு வானுர்திகள் கட்டுநாயக்கா விமானத் தளத்திலும் மற்றொன்று கொழும்பில் இராணுவத் தலைமையகத்திற்கு அருகிலும் நிறுத்தப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதை விடக் குண்டு துளைக்காத வாகனங்கள் மற்றும் கருவிகள் போன்றவையும் இந்தியத் தரப்பின் பாவனைக்காகக் கொழும்புக்குக் கொண்டு வரப்படவிருக்கின்றன.

இந்த உச்சி மாநாட்டுக்காகக் கொழும்பு வரும் மன்மோகன் சிங் கொழும்பில் எவ்வளவு காலத்துக்குத தங்கியிருப்பார் என்பது, மாநாடு நெருங்கும் சமயத்தில் இலங்கையின் பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டே தீர்மானிக்கப்படும் என விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

பாதுகாப்பு நிலைமை மோசமாக இருந்தால், உச்சி மாநாட்டின் முக்கிய நிகழ்வின் போது மாத்திரம் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடியதாக மன்மோகன் சிங் காலையில் வந்து அன்று மாலையே திரும்பிவிடுவார் என்றும கூறப்பட்டது.

ஒரு முழு நாளுக்கு மேற்பட்ட காலத்துக்கு இந்திப் பிரதமர் கொழும்பில் தங்குவாரயின் அவர் இங்கு கொழும்பு அரசுத் தலைவர்களைத் தவிர, பிற அரசியல் தலைவர்களையும் சந்திப்பார் என் எதிர்பார்க்கப்படுகின்றது.

அவர்களில் த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தனும் அடங்குகிறார் என்றும் அந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.

Exit mobile version