இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திம்புவில் சார்க் நாடுகளின் 16வது உச்சி மாநாட்டில் பல நாடுகளின் தலைவர்களுக்கு அவரது மகன் நாமல் ராஜபக்சவை அறிமுகம் செய்துவைப்பதை முக்கிய பணியாக மேற்கொண்டார். குடும்ப சகிதம் திம்பு சென்றிருந்த அவர், நேபாளபிரதமர், மாலைதீவுகள் ஜனாதிபதி போன்றோருடன் நீண்ட சந்திப்புக்களை மேற்கொண்டார். தற்போதைய சார்க் மாநாடுகளின் தலைவரான மகிந்த ராஜபக்ச அதன் தொடர்ச்சியான தலைமைப் பொறுப்பை பூட்டானிடம் கையளிக்கவிருப்பதால், நாமல் ராஜபக்ச சகிதம் பூட்டன் அதிபருடன் நீண்ட நேரப் பேச்சுவார்தைகளில் ஈடுபட்டார்.
இதே வேளை பூட்டான் பௌத்த கோவில்களில் இவர்களுக்காக விசேட பிரித் பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
ராஜபக்ச குடும்ப அரசியல் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதியின் குடும்ப அரசியலை விஞ்சியதாக அமைந்திருப்பதாக அவதானிகள் கருத்து வெளியிட்டனர்.
இதே வேளை, மஹிந்த ராஜபக்ஷவிற்கும், அமெரிக்காவின் தென் ஆசிய வலய நாடுகளுக்கான பிரதி ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளெக்கிற்கும் இடையில் பூட்டானில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
அண்மைய தேர்தல்கள் மற்றும் நாட்டின் ஏனைய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.