சார்க் நாடுகள் வரிசையில் தமிழீழம் மிக விரைவில் சேர்த்துக்கொள்ளப்படும் என்றும் இலங்கை அந்நாடுகள் வரிசையில் இருந்து வெகுவிரைவில் விரட்டியடிக்கப்படும் காலம் வரும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சிவாஜிலிங்கம் நேற்று நாடாளுமன்றில் கூறினார். சார்க் மாநாட்டுக்குச் செல்வதற்கான குறை நிரப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதுதொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:
இந்த அரசு தமிழ் மக்களைக் கொலை செய்துகொண்டு தமிழர்களின் பாதுகாவலன்போல் தன்னை சர்வதேசத்திற்குக் காட்டிக்கொள்கிறது.
பயங்கரவாத செயற்பாட்டை முன்னெடுக்கும் அரசு உள்ள நாடு இது என்பதை சர்வதேச நாடுகள் விளங்கிவைத்துக் கொண்டுள்ளன. இலங்கையை ஒரு பயங்கரவாத நாடாக சர்வதேச நாடுகள் மிக விரைவில் அறிவிக்கும் அதேநேரம் எமது தமிழீழத்தையும் அந்நாடுகள் ஏற்றுக்கொள்ளும்.
தமிழர்களின் உரிமைகளை மீறுகின்ற இந்த இலங்கை சார்க் நாடுகளின் வரிசையில் இருந்து நீக்கப்படும் காலம் மிக விரைவில் வரும்.
இந்த நாட்டைத் தற்காலிகமாகவாவது சார்க் நாடுகள் வரிசையில் இருந்து நீக்குமாறு நாம் சார்க் நாடுகளிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். எமது தமிழீழம் சார்க் நாடுகளின் வரிசையில் சேர்த்துக்கொள்ளப்படும் காலம் நிச்சயம் வரும்.
சார்க் மாநாடு முடியும்வரையிலான யுத்த நிறுத்தம் ஒன்றைப் புலிகள் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பைப் புலிகளின் பலவீனமாகப் பார்க்கக் கூடாது.
புலிகளின் இந்த அறிவிப்பைப் பயன்படுத்தி சமாதான முயற்சிகளில் அரசு ஈடுபட வேண்டும். அவ்வாறு இல்லாது தொடர்ந்து யுத்தத்தை மேற்கொண்டால் அரசு கடும் சிக்கலை எதிர்நோக்கவேண்டி வரும்.
இன்று எமது போராட்டம் நீதியானது என்பதை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளத் தொடங்கிவிட்டன.
இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் எமது தமிழீழத்தை அங்கீகரிக்கும் காலம் மிக விரைவில் வரும். இந்தியாவின் ஆசீர்வாதம் எமக்கு நிச்சயம் கிடைக்கும். என்றார்