Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சாதி ஆதிக்க சக்தியினர்:கோவையிலும் ஒரு தீண்டாமைச்சுவர்!

கோயம்புத்தூர் தந்தை பெரியார் நகரில் வசிக்கும் அருந்ததிய சமூகத்தினர் பயன்படுத்தும் சாலையை சாதிஆதிக்க சக்தியினர் மறித்து தடுப்பு சுவர் கட்டியுள்ளனர். இந்த அராஜகத்தை கோவை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஆதித்தமிழர் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளன.

கோவை மாநகராட்சி, சிங்கா நல்லூர் 10வது வட்டம் காமராஜர் ரோடு அருகில் உள்ள, தந்தை பெரியார் நகர். இக்குடியிருப்பில் ஆதி திராவிட நலத்துறையின் மூலம் 1989 ஆம் ஆண்டில் 58 குடும்பங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப் பட்டது.

தந்தை பெரியார் நகரிலிருந்து ஜீவா வீதி வழியாக, காமராஜர் ரோடு எனும் பிரதான சாலையை இணைக்கும் 30 அடி சாலை உள்ளது. இச்சாலை வழியாகத்தான் பெரியார் நகரில் வசிக்கும் தலித் மக்கள் காமராஜர் சாலைக்கு செல்ல வேண்டியுள்ளது. இங்கு மாநக ராட்சி மூலம் சாலை, கழிவுநீர் வடிகால் மற்றும் தெருவிளக்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.

அருந்ததியர் மக்கள் செல்லும் இச்சாலையை சாதி ஆதிக்க சக்தியினர் சிலர் தீண்டாமை எண்ணத்தோடு சுவர் கட்டி மறித்து அடைத்துள்ளனர்.

1989 ஆம் ஆண்டில் அருந்ததிய சமூகத்தினருக்கு இந்த மனைப்பட்டாக்கள் வழங்கப்படுவதற்கு முன்பு வரை தடுப்புச்சுவர் எழுப்பப்பட வில்லை. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பிறகுதான் தடுப்புச்சுவர் வைத்து, அந்தச்சுவரின் மறுபக்கத்தில், அதாவது தங்கள் பகுதியில் விநாயகர் சிலையொன்றை வைத்து பெயருக்கு கோவில் என்று பெயர்ப் பலகையும் மாட்டியுள்ளார்கள்.

அந்தக் கோவிலில் பூசைகள் எதுவும் நடப்பதில்லை. அருகில் உள்ள வீட்டுக்காரர் அந்தக் கோவிலை மாட்டுத்தொழுவமாகவே பயன்படுத்தி வருகின்றார். தலித் மக்கள் அந்தப் பாதையைப் பயன்படுத்தி தங்கள் வீடுகளுக்கு முன்பாக நடந்து சென்றுவிடக்கூடாது என்பதே அந்தக் கோவில் மற்றும் தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டதன் பின்னணி என்று பெரியார் நகர் மக்கள் கூறுகிறார்கள்.

பாதை மறிக்கப்பட்டு இருப்பதால் போதிய அடிப்படை வசதிகள் செய்வதிலும் பல சிரமங்கள் ஏற்பட் டுள்ளன. பாதை திறக்கப்பட்டால் தங்களுக்குத் தேவையான வசதி களும் கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பு அந்தப்பகுதி மக்களிடையே உள்ளது.

தற்போது சுவர் இருக்கும்பாதை மட்டுமின்றி, அருந்ததிய மக்களின் குடியிருப்புக்குள் வருவதற்கான மற்றொரு பாதையும், மனைப்பட் டாக்கள் தரப்பட்ட சமயத்தில் அடைக்கப்பட்டே இருந்தது என்ற அதிர்ச்சியான தகவலையும் அவர்கள் தருகிறார்கள். அந்தப்பாதையைத் திறக்க கடுமையான போராட்டம் நடந்துள்ளது. அப்போது, காவல் துறையினர் பலர் மீது வழக்குத் தொடுத்தனர். 1989 ஆம் ஆண்டில் போடப்பட்ட அந்த வழக்கில் சில ஆண்டுகளுக்கு முன்புதான் தீர்ப்பு வந்து தலித் மக்கள் விடுதலை யாகியுள்ளனர்.

இந்நிலையில், அண்மையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய பல போராட்டங்கள், அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு, ஆலய நுழைவுப் போராட்ட வெற்றிகள் போன்றவை பெரியார் நகர் மக்களுக்கு நம்பிக்கை அளித்தன. இத னால் தங்களுக்குரிய பாதை மறிக் கப்பட்ட கொடுமையிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி கோவை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஆதித்தமிழர் விடுதலை முன்னணி அமைப்பாளர்களை அணுகி கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து கோவை மாநகராட்சியின் வடக்கு மண்டலத்தலைவர் சி.பத்மநாபன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் யு.கே.சிவஞானம், மாநிலக்குழு உறுப்பினர்கள் வி. பெருமாள், கே.கணேஷ், வழக்கறி ஞர் வெண்மணி, மார்க்சிஸ்ட் கட்சி யின் நகரச் செயலாளர் கே.மனோ கரன், ஆதித்தமிழர் விடுதலை முன்னணியின் மாநில அமைப்பாளர் ரவிக்குமார் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித்தமிழர் விடுதலை முன்னணியின் நிர்வாகிகள் அந்த இடத்தைப் பார்வையிட்டனர்.

பொதுப்பாதையை மறித்தே சுவர் எழுப்பப்பட்டுள்ளது என்பது உறுதியானதால் இவ்வமைப்புகள் சார்பில் கோவை மாநகர ஆணையர் அன்சுல் மிஸ்ராவை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக்கொண்ட ஆணையர் பொதுப் பாதையை மறித்துக் கட்டப்பட்டுள்ள சுவர் அகற்றப்படும் என்று உறுதி அளித்தார்.

Exit mobile version