முத்துராமலிங்கத்தால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட இமானுவெல் சேகரனின் 54வது நினைவு குருபூஜை நாளை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு வருகை வந்த மக்கள் மீது காவல் துறை 11.09.2011 அன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏழு அப்பாவிகள் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே இக் கோரசம்பவம் நடைபெற்றது. இதனூடாக ஆதிக்க சாதியினரின் அடியாளாக ஜெயலலிதா தன்னை வெளிப்படுத்திக்கொண்டார்.
தலித் தலைவர் தியாகி இமானுவேல் சேகரன் தேவேந்திரர் என்று அழைக்கப்படும் பள்ளர் வகுப்பைச் சார்ந்தவர்.
இம்மானுவேல் சேகரன் நினைவிடம் பரமக்குடி கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் உள்ளது. ஆண்டுதோறும் தாழ்த்தப்பட்ட மக்கள் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பல மாவட்டங்களில் இருந்து கடந்த சில ஆண்டுகளாக லட்சக்கணக்கான தலித் மக்கள் குருபபூஜை நாளில் வருகை தருகின்றனர். பெண்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்தும், ஆண்கள் காவடி எடுப்பதும், சிலம்பாட்டம் ஆடுவதும், வருகின்ற மக்களுக்கு அன்னதானம், தண்ணீர் பந்தல், புத்தக கடை விற்பனை தியாகி இமானுவேல் சேகரன் படம் அச்சடித்த பனியன் விற்பனை என்று கோவில் திருவிழாவில் கடவுளை வணங்குவது போல தியாகி இம்மானுவேல் நினைவு நாளை மக்கள் கடைபிடிக்கின்றனர்.
இதை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ஒட்டுமொத்த தலித் மக்களின் கோரிக்கையாக முன் வைக்கப்பட்டு அதற்கான ஆதரவும் பெருகி வரும் வேளையில் ஜெயலலிதா அரசபடைகளால் அப்பாவிகள் கொல்லப்பட்டனர். அதே வேளை கொலையாளிக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்படுகின்றது. இதையொட்டி விழா முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இவற்றை பார்வையிட நேற்று அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், முனுசாமி, வைத்திலிங்கம், செல்லூர் ராஜு, டாக்டர் சுந்தர்ராஜன், உதயகுமார் ஆகியோர் பசும்பொன் வந்தனர்.
அவர்களை தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் பொறுப்பாளர்கள் வரவேற்றனர். பின்னர் அமைச்சர்களிடம் தேவர் சிலைக்கு தங்கக் கவசம் வழங்கிய முதல்–அமைச்சருக்கு நன்றி தெரிவித்து அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
தேவர் சாதிக் கொலையாளிக்கு தங்கக்கவசம் அணிவிப்பதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிகசெலவில் நடைபெறுகின்றது. தமிழ்நாடு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் கமுதிக்கு வந்து போலீஸ் அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து போலீஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதில் தென்மண்டல ‘ஐ.ஜி.’ அபய்சிங்குமார், ‘டி.ஐ.ஜி.’ அனந்தகுமார் சோமானி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மயில்வாகனன், அஸ்வின் முகுந்கோட்னிஸ் உள்பட போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர். பின்னர் பசும்பொன் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.