அமெரிக்க நாட்டின் 44-வது அதிபராக பதவியேற்றுக்கொண்ட பிறகு நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய பராக் ஒபாமா அமெரிக்கர்களுக்கு முன்புள்ள சவால்களை வெற்றி கொள்ள வேண்டிய அவசியத்தையும் விவரித்தார்.
“நமது பொருளாதாரத்தை மீண்டும் செயல்பட வைக்க விரைவான, துணிச்சலான நடவடிக்கைகளே இப்போதைய தேவை. புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க மட்டும் அல்ல, புதிய அடித்தளத்தை அமைக்கவும் கடினமாக உழைப்போம். சாலைகளையும், பாலங்களையும், மின்விநியோக கட்டமைப்புகளையும் தகவல் தொழில்நுட்ப தடங்களையும் உருவாக்குவோம்.
அறிவியலுக்கு உரிய இடத்தை அளிப்போம், மக்களுக்குத் தரமான சுகாதார வசதிகள் குறைந்த செலவில் கிடைக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவோம்.
சூரியனையும் காற்றையும், மண்ணையும் பயன்படுத்தி நம்முடைய கார்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் தேவைப்படும் எரிபொருள்களைப் பெறுவோம்.
புதிய காலத்துக்கு ஏற்ப நம்முடைய பள்ளிக்கூடங்களையும் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் தயார்படுத்துவோம். இவற்றையெல்லாம் நாம் செய்வோம், நம்மால் செய்ய முடியும்.
நாம் சந்திக்கும் சவால்கள் உண்மையானவை, அவை பலதரப்பட்டவை, அவை கடுமையானவை. மிகவும் குறுகிய காலத்தில் இவற்றையெல்லாம் தீர்த்துவிட முடியாது. ஆனால் அமெரிக்காவைப் பற்றி நம் அனைவருக்கும் தெரியும், நம்மால் இவற்றுக்குத் தீர்வு காண முடியும்.
என்னுடைய லட்சியங்களை, நோக்கங்களைக் கேள்வி கேட்பவர்கள் இருக்கிறார்கள். இவையெல்லாம் பேராசைகள் என்றுகூட அவர்கள் விமர்சிக்கிறார்கள். அவர்களுடைய நினைவாற்றல் மிகவும் குறுகியது என்றே கருதுகிறேன். இந்த நாடு இதுவரை புரிந்துள்ள சாதனைகளை அவர்கள் மறந்துவிட்டார்கள்.
கருத்துச் சுதந்திரம் கொண்ட ஆண்களும் பெண்களும், தங்களுடைய கற்பனா சக்தியைக் கொண்டு, பொது நோக்கத்துக்காகச் சேர்ந்து பாடுபடும்போது என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதை ஏற்கெனவே சாதித்துக்காட்டிய நாடுதான் அமெரிக்கா.
எல்லாம் முடிந்துவிட்டது, இனி நம்மால் தலையெடுக்க முடியாது என்று இதுவரை கேட்டுகேட்டுப் புளித்துப்போன அரசியல் விவாதங்களால் நாம் வீணானதுதான் மிச்சம், இதை நம்மை விமர்சிப்பவர்கள் இன்னமும் புரிந்துகொள்ளவில்லை.
நம்முடைய அரசாங்கம் பெரியதா, சிறியதா என்பதல்ல அது செயல்படுகிறதா, குடும்பங்களில் வேலையில்லாத் திண்டாட்டம் போக பயன்படுகிறதா, கெüரவமான ஊதியத்துக்கு வழி செய்கிறதா, முதியவர்கள் கண்ணியத்துடன் வாழ சமூகநல பாதுகாப்பு தருகிறதா என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி.
ஆம் என்பதுதான் இதற்குப் பதில் என்றால் நாம் முன்னேற விரும்புகிறோம் என்று அர்த்தம். இல்லை என்றால், இந்த திட்டங்கள் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும்.
மக்களுடைய பணத்தைச் செலவிடும் பொறுப்பு உள்ள நாம் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். அரசுப் பணத்தை முறையாக, சரியாகச் செலவிட வேண்டும். தவறான பழக்கங்கள் இருந்தால் அதை உடனே கைவிட வேண்டும். நம்முடைய வேலைகள் அனைத்தும் வெளிப்படையாக, ஒளிவுமறைவு இல்லாமல் இருக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் அரசுக்கும் மக்களுக்கும் இடையில் நாம் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்.
செல்வத்தை உருவாக்கும் சக்தியும் அதை விரிவுபடுத்தும் சுதந்திரமும் நமக்கு இருக்கிறது என்றாலும் சந்தையைக் கட்டுப்படுத்த ஆள் இல்லாவிட்டால் அது ஒரு நாள் கட்டுமீறிவிடும் என்பதையே இப்போதைய நெருக்கடி நமக்கு உணர்த்துகிறது.
பணக்காரர்களுக்கு மட்டும்தான் ஒரு நாடு என்றால் அது மேலும் வளர்ச்சி பெற முடியாது. நம்முடைய பொருளாதார வெற்றி என்பது நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியை மட்டுமே கணக்கில் கொண்டது அல்ல, அந்த வளர்ச்சியின் பலனை அனுபவிக்கும் வாய்ப்பை எல்லோருக்கும் கொடுப்பதில்தான் இருக்கிறது. இதை ஏதோ தர்மம் செய்ய வேண்டும் என்பதற்காக அல்ல, நம் எல்லோருடைய நன்மையைக் கருதியே நாம் செய்தாக வேண்டும்.
சிலருடைய பேராசை, பொறுப்பற்ற தன்மை காரணமாகத்தான் நமது பொருளாதாரம் இப்படி நெருக்கடிக்கு ஆளானது.
நெருக்கடியிலிருந்து மீள நாம் அனைவருமே பொறுப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது’ என்று தனது உரையில் வலியுறுத்தினார் பராக் ஒபாமா.