
ஐக்கிய நாடுகள் சபை கொழும்பு அலுவலகத்தின் முன்னால் நடந்த போராட்டத்தில் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் பொலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சிலர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கம் திட்டமிட்டு நிகழ்த்தும் நாடகமே இது என்பது ஒரு புறத்திலிருக்க நிபுணர்கள் குழுவிற்கு எதிராக இலங்கையின் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட அனைத்து பேரினவாதக் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இதே வேளை ஐக்கிய நாடுகள் காரியாலயத்தில் வேலை செய்பவர்களை பணயக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப் போவதாகவும், சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளப்போவதாகவும் விமல் வீரவன்ச அறிவித்துள்ளார். இங்கு போர்க் குற்றத்திற்குப் பதில் கூற வேண்டியவர்கள் இலங்கை அரச அதிகாரிகளும் ராஜபக்ச குடும்பத்தினரும் தமிழ்த் துணைக்குழுக்களும் என்ற நிலையில் விமல் வீரவன்ச இலங்கை அரசால் ஏவு கருவியாகப் பயன்படுத்தப் படுகிறார் என்றே கருத்து நிலவுகிறது. தனது பெருந்தேசியவாத அரசியல் தளத்தை விரிவு படுத்த வீரவன்சவிற்கும் இது சிறந்த சந்தர்ப்பமாக அமைகிறது.