Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சவூதி கப்பலை விடுவிக்க 25 மில்லியன் பணம் கேட்கும் கடற் கொள்ளையர்கள்!

22.11.2008.

மொகாதீஷு:  கடத்திச் சென்றுள்ள சவூதி அரேபியாவின் பிரமாண்ட எண்ணெய்க் கப்பலான சிரியஸ் ஸ்டாரை விடுவிக்க வேண்டுமானால் 25 மில்லியன் டாலர் பணம் தர வேண்டும் சோமாலியா கடற் கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பணத்தை பத்து நாட்களுக்குள் தர வேண்டும் எனவும் அவர்கள் கெடு விதித்துள்ளனர்.

ஏடன் வளைகுடா பகுதியில் சோமாலியா கடற் கொள்ளையர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் உலக நாடுகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், உலகிலேயே மிகப் பிரமாண்டமான எண்ணெய்க் கப்பலான சிரியஸ் ஸ்டாரை கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்று விட்டனர்.

உலக நாடுகள் பெரும் அதிர்ச்சியில் உள்ள நிலையில், கப்பலை விடுவிக்க வேண்டுமானால் 25 மில்லியன் டாலர் பணம் தர வேண்டும் சோமாலியா கடற்கொள்ளையர்கள் கெடு விதித்துள்ளனர். 10 நாள் கெடுவையும் அவர்கள் விதித்துள்ளனர்.

இதுகுறித்து கடற்கொள்ளையர்களின் பிரதிநிதியான முகம்மது சயத் கப்பலிலிருந்து செய்தி நிறுவனம் ஒன்றைத் தொடர்பு கொண்டு பேசுகையில், கப்பலின் சவூதி உரிமையாளர்கள் 25 மில்லியன் டாலர் பணம் தர வேண்டும். இதுதொடர்பாக அதிகம் பேச விரும்பவில்லை. 10 நாள் அவகாசம் தருகிறோம். அதற்குள் தராவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். அது மிகவும் அபாயகரமானதாக இருக்கும் என எச்சரிக்கிறோம் என்றார்.

தற்போது சோமாலியாவின் ஹரதீரே என்ற இடத்தில் கப்பலை கொள்ளையர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், அதிகரித்து வரும் கடற் கொள்ளையர்கள் அட்டகாசத்தால் அதிக அளவிலான போர்க் கப்பல்களை இப்பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப் போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

சோமாலியாவைச் சுற்றிலும் இந்தக் கப்பல்களை நிறுத்தப் போவதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது.

மேலும், கொள்ளையர்கள் அட்டாகத்தைத் தடுக்க சர்வதேச அளவிலான ராணுவ நடவடிக்கையை எடுத்தாக வேண்டும் என நேட்டோ அமைப்புக்கான ரஷ்ய தூதர் டிமிட்ரி ரோகோஸின் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெறும் ரோந்துப் பணி மட்டும் இதற்கு தீர்வாகாது. ஐரோப்பிய யூனியன், நேட்டோ உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால்தான் கடற் கொள்ளையர்கள் அட்டகாசத்தைத் தடுக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version